அரசியல், இந்தியா, தேர்தல்

மோடிக்கு இது புதுசு

4ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனால் இன்று வரை புதிய சபாநாயகர் யார் என்பதை மோடியால் தேர்வு செய்ய முடியவில்லை. சபாநாயகர் பதவியை தெலுங்குதேசம் கட்சிக்கு கேட்டு ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு செக் வைத்து விட்டார். 17வது மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை மீண்டும் 18வது மக்களவைக்கும் சபாநாயகராக நியமிக்க மோடிக்கு ஆசை. இன்று வரை முடியவில்லை.

அமைச்சரவை பதவி ஏற்று 24 மணி நேரம் கழித்த பிறகுதான் இலாகாக்கள் அறிவிக்க முடிந்ததே, அதே போல் தான் சபாநாயகர் தேர்வு தொடர்பாக வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் திண்டாடி வருகிறார் மோடி. இந்த யுத்தம் மோடிக்கு புதியதாகத்தான் இருக்கும். எதையும் கேட்டு சகித்துக்கொண்டு, சரிசொல்லி விட்டு போகிற ரகம் அல்ல அவர். 2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராக அவர் பதவி ஏற்றநாள் முதல் 2024 மக்களவை தேர்தல் முன்பு வரை அவர் வைத்ததுதான் சட்டம்.

அதை நிறைவேற்ற வேண்டியது மற்றவர்களின் கடமை. அப்படித்தான் நடந்து வந்தார். அப்படித்தான் அவரது அதிகார உச்சம் இருந்தது. ஆனால் முதன்முறையாக அவரது விருப்பத்திற்கு மாறாக, அவரே தலையசைக்க வேண்டிய நிலை. அந்த நிலை அமைச்சரவை நியமனத்தில் முதலில் நடந்தது. கூட்டணிக்கட்சிகளின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்தார் மோடி. அவர்களுக்கு வேண்டிய இலாகாக்கள் ஒதுக்கினார். அந்த வலி மறைவதற்குள் இப்போது அடுத்த சுற்று. சபாநாயகர் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம்.

நாடாளுமன்றத்தை கூட்டி புதிய எம்பிக்கள் பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய சபாநாயகர் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் தயவுக்கு தலையாட்ட வேண்டும். இது எல்லாம் மோடிக்கு புதிய அனுபவம். ஆனால் இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் நீடிக்க வேண்டும் என்றால், ஒன்று கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டும், இல்லை என்றால் பெரும்பான்மைக்கு தேவையான எம்பிக்களை பெற வேறுவழிகளை சிந்திக்க வேண்டும்.

இப்போது இருக்கிற அரசியல் சூழலில் எதையும் சிந்திக்க கூடிய மனநிலையில் மோடி இல்லை. கூட்டணிக்கட்சிகள் எது கேட்டாலும், சரி என்று சொல்கிற மனநிலை அவரிடம் வந்துவிட்டது. இது யதார்த்தமானது. கூட்டணி அரசை தலைமை ஏற்று நடத்திய, அந்த கஷ்டத்தை சந்தித்த ஒவ்வொரு பிரதமர்களும் அனுபவித்ததுதான். அதுதான் மோடிக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மோடிக்கு நிச்சயம் மாற்றுக்கருத்து இருக்கும். ஏனெனில் 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் மோடியால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் வேறு வழியில்லை. பா.ஜ தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தாகி விட்டது. எனவே தனது யதார்த்தத்தை வௌிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தின் தலைமை பீடத்தில் இருந்து வருகிறார் மோடி. குஜராத் முதல்வராக கிட்டத்தட்ட 13 ஆண்டுகள், பிரதமராக 10 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறார். இப்போது ஏற்பட்டுள்ள சுமை, தலையசைக்க வேண்டிய நிலை மோடிக்கு முன்எப்போதும் ஏற்பட்டதில்லை.

அமைச்சர்கள் இலாகா, சபாநாயகர் தேர்தலுக்கே இப்படி துவண்டுவிட்டால் எப்படி?. இதுதானே ஆரம்பம். இன்னும் போகப்போக முன்னாள் பிரதமர்கள் விபி சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், ஏன் கடைசியாக உங்களது கேலி கிண்டலால், அதிக மனவேதனைக்கு உள்ளான மன்மோகன்சிங் ஆகியோர் அனுபவித்த கூட்டணி ஆட்சியின் யதார்த்தங்கள் உங்களுக்கும் வந்து சேரும். அந்த சூழலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்பதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *