2016-ம் ஆண்டு முதலே `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை முன்வைத்துவருகிறார் பிரதமர் மோடி.
எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?
இந்தத் திட்டத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமென்பதைத் தாண்டி, ஒரு முக்கியக் காரணத்தை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். “ஒரே தேர்வு, ஒரே ரேஷன் அட்டை, ஒரே வரி, ஒரே தேர்தல்’ என வரிசையாக `ஒரே’ என்ற பெயரில் திட்டங்களை அடுக்குகிறது பா.ஜ.க. இது அனைத்துக்கும் ஒரே அடிப்படைக் காரணம்தான். இந்தியாவில், `ஒரே நாடு ஒரே பண்பாடு’ என்பதை நிறுவ நினைக்கிறது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம். அதைத்தான் அமல்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க அரசு.
பல்வேறு மொழிகள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், மதங்கள், கலாசாரங்கள் என்று வேற்றுமைகள்கொண்டதுதான் இந்தியா. இந்த அடிப்படை உண்மையை மறைக்க அல்லது மாற்ற பா.ஜ.க தொடர்ந்து முயல்கிறது. அதற்காகத்தான் இந்த `ஒரே’ என்பது போன்ற திட்டங்கள்” என்கின்றன எதிர்க்கட்சிகள்.
மேலும், “இந்தத் திட்டத்தின் மூலம் பல விதிகளைக் கொண்டுவந்து நாடு முழுவதும் பா.ஜ.க கொடியைப் பறக்கச்செய்வதும் மத்திய பா.ஜ.க அரசின் திட்டமாக இருக்கும். இன்னும் சில காலம் சென்றால், தேர்தலே இல்லை என்ற திட்டத்தையும் கொண்டுவருவார்கள் பா.ஜ.க-வினர். மாநில கூட்டாட்சித் தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது இந்தத் திட்டம்” என்று கொதிக்கிறார்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்களாகச் சிலவற்றை அடுக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
* மாநில அளவிலும், தேசிய அளவிலும் இருக்கும் பிரச்னைகள் வெவ்வேறாக இருக்கும். அப்படியிருக்கையில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால், பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களிக்கலாம் என்று மக்கள் முடிவெடுப்பதில் பெருங்குழப்பம் ஏற்படும்.
* எதிர்பாராத வகையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சிக் கலைக்கப்பட்டுவிட்டால், அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும் வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற வாய்ப்பிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானதாக இருக்கும். பொதுவாக ஆட்சி கவிழ்க்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள்ளாக அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற விதி தற்போதைய சட்டத்தில் இருக்கிறது. `ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை கொண்டுவரப்பட்டால், இந்தச் சட்டம் மாற்றியமைக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இது மக்களின் உரிமைக்கு எதிரானது.
அதுபோல, பெரும்பான்மையில்லாமல் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்போது, சில காலத்தில் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியான கட்டத்தில், நாடு முழுவதுமிருக்கும் மாநிலங்களில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான சூழல் உருவாகலாம்.
TAG : ONE NATION ONE ELECTION