காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு டிஜிபியாகப் பொறுப்பு வகித்த மூத்த அதிகாரி மீது காவல் பணித் துறை அதிகாரி ஒருவர் அளித்திருக்கும் பாலியல் தொந்தரவுப் புகாரானது ஒட்டுமொத்தக் காவல் துறைக்குமே தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். அரசின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் உயரதிகாரிகள், அதிகாரப் படிநிலையின் உச்சியிலிருந்து கட்டளைகளைப் பிறப்பிப்பவர்களாக மட்டுமின்றி, அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் சகலருக்கும் முன்னுதாரணர்களாகவும் விளங்க வேண்டியது அவசியம்.
மூத்த காவல் அதிகாரி மீதான புகாரையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். புகாரை ஆட்சிப் பணித் துறை, காவல் பணித் துறை அதிகாரிகள் ஆறு பேரைக் கொண்ட குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி விசாரிப்பதற்குக் காவல் துறை இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார். பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகப் புகார் அளித்திருப்பவரும் காவல் துறை அதிகாரி என்பதே பெண்களுக்குப் பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை எடுத்துக்காட்டுவதற்குப் போதுமானது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக 1992-ல் இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்து முக்கிய நகரங்களிலும் மகளிர் காவல் நிலையங்களைத் தொடங்குவதில் தனிக் கவனம் காட்டினார். பாலின பேதமின்றிப் பெண்களும் காவல் துறைப் பணிகளில் பங்கேற்கும் சூழல் உருவாகியுள்ளது என்று பெருமை கொள்ள வேண்டிய நாம், காவல் துறையினரிடையேயும் பாலியல் புகார்கள் எழுகின்ற சூழலை என்னவென்பது?
இத்தகைய புகார்களைக் காவல் துறையில் உடன் பணியாற்றும் அதிகாரிகளே மூடி மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர் என்பது மேலும் மோசமானது. பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண் அதிகாரி புகார் தெரிவிக்கக் கூடாது என்று அவரின் கீழ் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளே சமாதானப்படுத்தவும் முயன்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்க சென்னை வந்தபோது, அவரது வாகனத்தை மறித்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார் மற்றொரு காவல் துறை அதிகாரி. உயர் பதவியில் இருக்கும் ஒருவர், தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக எந்த நிலைக்கும் செல்லக் கூடியவராக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே, அவர் இதே வகையிலான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளானவர். பணியிடை நீக்கம், காத்திருப்புப் பட்டியல் போன்ற நடவடிக்கைகள் எல்லாம் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை வெகு விரைவில் விடுவித்துவிடுகின்றன என்பதோடு, குற்றங்களை இழைப்பவர்கள் அந்நடவடிக்கைகளால் மனம்திருந்துவதும் இல்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது.
இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கைத் தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளதோடு சிபிசிஐடி விசாரணை நிலவரம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நம்பிக்கையளிக்கிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் நியாயமானது, இனிமேலாவது இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் நியாயமும், அத்துமீறலில் ஈடுபட்டவருக்கும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களுக்கும் கிடைக்கும் கடும் தண்டனையும் இனிமேல் இத்தகைய அத்துமீறல் நடக்கவே நடக்காது என்ற சூழலை உருவாக்க வேண்டும்.
source : www.hindutamil.in