in ,

20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கை அணி உலக சாம்பியன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சுருட்டியது

Sri Lankan cricket team in the World Championships final match Rolled India

மிர்புர்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சுருட்டிய இலங்கை அணி முதல் முறையாக உலக கோப்பையை வசப்படுத்தியது.

மழையால் தாமதம்

16 அணிகள் இடையிலான 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கியது. இதன் இறுதி ஆட்டத்திற்கு இந்தியாவும், இலங்கையும் முன்னேறின.

இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா–இலங்கை இடையிலான இறுதி ஆட்டம் மிர்புரில் நேற்றிரவு அரங்கேறியது. மழை காரணமாக ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் பிரசன்னாவுக்கு பதிலாக திசரா பெரேரா சேர்க்கப்பட்டார்.

இந்தியா பேட்டிங்

டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் மலிங்கா முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி ரஹானேவும், ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரஹானே 3 ரன்னில் (8 பந்து) மேத்யூசின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் விராட் கோலி களம் இறங்கினார். கோலியும், ரோகித் ஷர்மாவும் ஒரு வித பதற்றத்துடனே விளையாடினர். மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க சிரமப்பட்டனர். ஆடுகளத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு சரமாரியான நெருக்கடி அளித்தனர்.

இவற்றுக்கு மத்தியில் விராட் கோலி அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டினார். மறுமுனையில் ரோகித் ஷர்மா 29 ரன்களில் (26 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார். 3–வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங் ஆட வந்தார்.

அடங்கி போன காளை

11–வது ஓவரில் இறங்கிய யுவராஜ்சிங், இந்த அளவுக்கு சொதப்புவார் என்று யாரும் நினைக்கவில்லை. அவர் ஆடிய விதத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல, வெளியில் இருந்த சக வீரர்களும் வெறுத்து போய் விட்டனர். ‘வெடிக்க’ வேண்டிய நேரத்தில் புஸ்வாணமாகி, இந்தியாவின் உத்வேகத்தை ஒரேயடியாக குழி தோண்டி புதைத்து விட்டார். இதனால் ரன்ரேட் ஆமை வேகத்தில் நகர்ந்ததுடன், வெளியேறு…வெளியேறு… என்று அவரை நோக்கி ரசிகர்கள் கூச்சலிட தொடங்கி விட்டனர்.

மறுபுறம் விராட் கோலி முடிந்த வரை வேகம் காட்டினார். குலசேகராவின் ஓவரில் ஒரு சிக்சரும், 2 பவுண்டரியும் ஓட விட்டார். ஆனாலும் இறுதி கட்டத்தில் இலங்கை பவுலர்களின் கையே ஓங்கியது. கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் ரன்வேட்டையாட முடியாமல் இந்திய வீரர்கள் பரிதவித்தனர். அணியின் ஸ்கோர் 119 ரன்களாக உயர்ந்த போது, ஒரு வழியாக யுவராஜ்சிங் 11 ரன்களில் (21 பந்து), புல்டாஸ் பந்தில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த கேப்டன் டோனியாலும், மலிங்கா–குலசேகராவின் யார்க்கர் பந்து வீச்சில் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசி 4 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, ஒரு பவுண்டரி கூட அடிக்காதது தான் உச்சக்கட்ட சோகம். சொல்லப் போனால், போராட்டமின்றி இந்திய பேட்ஸ்மேன்கள் சரண் அடைந்து விட்டனர். அணியின் மானத்தை காப்பாற்றிய விராட் கோலி 77 ரன்களில் (58 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி பந்தில் ரன்–அவுட் ஆனார். முன்னதாக கோலி 11 ரன்னில் ஆடிக் கொண்டிருந்த போது கொடுத்த  எளிதான கேட்ச் வாய்ப்பை மலிங்கா தவற விட்டார். அந்த கேட்ச்சை மட்டும் மலிங்கா பிடித்திருந்தால் இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

 

131 ரன்கள் இலக்கு

20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 130 ரன்களே எடுத்தது. 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஓர் அணி நிர்ணயித்த குறைந்த பட்ச இலக்கு இதுவாகும். இதற்கு முன்பு 2012–ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்ததே குறைந்த பட்ச இலக்காக இருந்தது.

பின்னர் எளிய இலக்கை நோக்கிய ஆடிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் குசல் பெரேரா (5 ரன்), தில்ஷன் (18 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தாலும் அடுத்து வந்த வீரர்கள் கைகொடுத்தனர். இலக்கு குறைவு என்பதால் இலங்கை வீரர்கள் நெருக்கடியின்றி விளையாடி இலக்கை நோக்கி பயணித்தனர்.

இலங்கை அணி சாம்பியன்

அஸ்வின் வீசிய 18–வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி இலங்கை அணி இலக்கை எட்டிப்பிடித்தது. முடிவில் இலங்கை அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக பட்டத்தை சொந்தமாக்கியது. தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய சங்கக்கரா 52 ரன்களுடனும் (35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), திசரா பெரேரா 21 ரன்னுடனும் (14 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றனர். சங்கக்கரா ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

20 ஓவர் உலக கோப்பையை முதல் முறையாக வசப்படுத்திய இலங்கை அணிக்கு மொத்தத்தில் இது 2–வது உலக கோப்பையாகும். இதற்கு முன்பு 1996–ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையை சுவைத்திருக்கிறது. மகுடம் சூடிய இலங்கை அணிக்கு ரூ.6 கோடியே 70 லட்சமும், 2–வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.3 கோடியே 35 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

கோப்பையை வென்றால் ரூ.6 கோடி போனஸ் வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர்  போர்டு

இந்தியா

ரோகித் ஷர்மா (சி) செனநாயக்கே  29

ரஹானே (பி) மேத்யூஸ்    3

கோலி (ரன்–அவுட்)    77

யுவராஜ்சிங் (சி) பெரேரா (பி) குலசேகரா 11

டோனி (நாட்–அவுட்)    4

எக்ஸ்டிரா    6

மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 130

விக்கெட் வீழ்ச்சி: 1–4, 2–64, 3–119, 4–130

பந்து வீச்சு விவரம்

குலசேகரா    4–0–29–1

மேத்யூஸ்    4–0–25–1

செனநாயக்கே    4–0–22–0

மலிங்கா    4–0–27–0

ஹெராத்    4–0–23–1

இலங்கை

குசல் பெரேரா (சி) ஜடேஜா  (பி) மொகித் 5

தில்ஷன் (சி) கோலி (பி) அஸ்வின் 18

ஜெயவர்த்தனே (சி)  அஸ்வின் (பி) ரெய்னா 24

சங்கக்கரா (நாட்அவுட்)    52

திரிமன்னே (சி) டோனி  (பி) மிஸ்ரா 7

திசரா பெரேரா(நாட்–அவுட்) 21

எக்ஸ்டிரா    5

மொத்தம் (17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 132

விக்கெட் வீழ்ச்சி: 1–5, 2–41, 3–65, 4–78

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார்    3–0–18–0

மொகித் ஷர்மா    2–0–18–1

அஸ்வின்    3.5–0–27–1

அமித் மிஸ்ரா    4–0–32–1

ரெய்னா    4–0–24–1

ஜடேஜா    1–0–11–0

தினத்தந்தி

நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது

வாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம்