பத்திரிகையாளர் வினோத் துவா மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக, அவதூறு வழக்கைச் செல்லாது என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அரசின் நடவடிக்கைகள் குறித்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் தேசத் துரோகத்தின் கீழ் வராது என்று வழிகாட்டும் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய அரசமைப்பால் வகுத்துரைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துவதில் நீதித் துறையின் பங்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, கரோனா பெருந்தொற்று விவகாரத்தில் ஒன்றிய அரசின் மெத்தனங்களைப் பற்றியும், பயங்கரவாதிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது பற்றியும் விமர்சித்து எழுதியதன் அடிப்படையில் அவர் மீது தேசத்துரோகம், அவதூறு ஆகிய குற்றங்களைப் புரிந்ததாக வழக்கு புனையப்பட்டது. பத்திரிகை விமர்சனங்களின் நோக்கம் பிரச்சினைகளைக் கவனப்படுத்தி, உடனடியாக அதற்குத் தீர்வுகாண வலியுறுத்துவதுதானே அன்றி, தேசவிரோத உணர்ச்சியைத் தூண்டிவிடுவதல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கிறது நீதிமன்றம்.
இந்த வழக்கின் தீர்ப்பை இந்த வழக்குக்கு மட்டுமேயானதாகச் சுருக்கிக்கொண்டுவிடவும் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் அரசை நோக்கிக் கேள்வி எழுப்பிய அறிவுத் துறைச் செயல்பாட்டாளர்கள் பலரும் இன்றும் சிறைச்சாலைகளில் இதே குற்றச்சாட்டுகளின் பெயரில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பிணையில் வெளிவர முடியாத குற்றங்களைச் சாட்டிச் சிறைக்கு அனுப்புவது என்பது கொடுங்குற்றவாளிகளையும் குற்றத்தொழில் நடத்தையர்களையும் கட்டுப்படுத்திப் பொதுச் சமூகத்தில் அமைதி நிலவச் செய்வதற்கான வாய்ப்பாகவே அனுமதிக்கப்படுகிறது. குண்டர் சட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் நீதிமன்றங்களின் தலையீடும் கண்காணிப்பும் அனுமதிக்கப்பட்டுள்ளன. தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பெயரால் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அந்த வாய்ப்புகூட மறுக்கப்படுகிறது. பூனாவிலும் டெல்லியிலும் ஒன்றிய அரசை விமர்சித்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும்கூடச் சிறைவிடுப்புக்கான வாய்ப்பின்றித் தவிக்கிறார்கள். இந்தத் தீர்ப்பின் வழியாக உறுதிசெய்யப்பட்டிருக்கும் கருத்துரிமையின் பயன் உடனடியாக அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
1962-ல் வெளிவந்த கேதார்நாத் சிங் வழக்கைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் வன்முறையைத் தூண்டியிருக்க வேண்டும் அல்லது அவர் அரசுக்கு எதிராகச் செயல்பட்டிருக்க வேண்டும் என அந்தக் குற்றத்துக்கான வரையறையைத் தெளிவுபடுத்தியுள்ளது. அரசுக்கு எதிராக இயங்குவது என்பது வேறு, அந்த அரசு சரியான முறையில் இயங்க வேண்டும் என்று வலியுறுத்துவது என்பது வேறு. அரசு இயந்திரம் ஏன் இயங்கவில்லை என்று கேள்வி கேட்பதே தேசத்துரோகம் ஆகுமென்றால், பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல; சாமானிய மக்களும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சர்வாதிகாரம் நிலவுகிறது என்றே பொருளாகும். இந்தத் தீர்ப்பால் நான்காவது தூணை வலுப்படுத்தியிருக்கும் மூன்றாவது தூணுக்கு நன்றிகள். உண்மையில், இது முதலிரண்டு தூண்களையும் இன்னும் வலுப்படுத்துவதுதான்.