ஞானவாபி மசூதி தொழுகை நடத்த அனுமதி- சுப்ரீம் கோர்ட்

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள உலக புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதன் வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதன்படி,மூன்று நாட்கள் ஞானவாபி மசூதி வளாகத்தில் நடைபெற்ற கள ஆய்வு நேற்று (மே 16) நிறைவடைந்தது. இதில் முக்கிய அம்சமாக மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீிதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மசூதி வளாகத்துக்கு சீல்… பிரதமர் மோடி தொகுதியில் பரபரப்பு!

இந்த நிலையில், மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரித்தனர்.

உத்தரப் பிரதேச மாநில அரசு, மனுதாரர் என இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ‘ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட இடத்தை பாதுகாக்கும்படி உத்தரவிட்டனர்.

அதேசமயம் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை எனவும், ஒரு நேரத்தில் 20 பேருக்கு மட்டுமே தொழுகை செய்ய அனுமதி என்ற மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு வரும் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *