தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரிய நடவடிக்கை. குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்து மக்களிடம் அச்சங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. அதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் தொடர்ந்து போராட்டங்களும் நடந்துவருகின்றன. போராடும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. எனினும், மக்களின் அச்சத்தை இது நிரந்தரமாகப் போக்கிவிட்டதாக ஆகாது. தமிழக அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பொறுத்தவரை 2003-லேயே சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே 2010-ல் குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் நடந்தன. எனினும், தற்போது பதிவேட்டுக்காகக் கேட்கப்படும் கூடுதல் விவரங்களும் அதற்கான சான்றுகளுமே அச்சத்துக்குக் காரணமாக இருக்கின்றன. குடிமக்களின் தாய்மொழி, அவர்களது குடும்பத்தினர் பெயர்கள் ஆகியவற்றுடன் ஆதார், ஓட்டுநர் உரிமம் முதலான சான்றுகளும் செல்பேசி விவரங்களும் புதிதாகக் கேட்கப்படுகின்றன. புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்த விவரங்கள் மீது விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அது கிடைக்கும் வரையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதையே ஏன் சட்டமன்றத் தீர்மானமாக நிறைவேற்றக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதங்கள் நடந்த அடுத்த நாள், டெல்லி சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், வங்கம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்கள்தொகைப் பதிவேட்டுக்காகத் தற்போது கேட்கப்படும் புதிய விவரங்கள், அது வழக்கமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அல்ல என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தமே மக்கள்தொகைப் பதிவேடு குறித்த இத்தகைய அச்சங்களுக்கான அடிப்படைக் காரணம். இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருந்தாலும்கூட வழக்கமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடக்கும்; புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே தற்போது கேட்கப்படாது.
எதிர்வரும் ஜூன் மத்தியில் தொடங்கி ஜூலை வரையில் முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. தமிழக அரசு கோரியபடி மத்திய அரசிடமிருந்து விளக்கம் கிடைத்த பிறகு, குடிமக்களிடமிருந்து புதிய விவரங்கள் கேட்கப்படுமா என்று எந்த உறுதியையும் தமிழக அரசு அளிக்கவில்லை. புதிய திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் மாநிலங்களும்கூட 2010-ன் பழைய மக்கள்தொகைப் பதிவேட்டைத்தான் பின்பற்றப்போகின்றன. ஆனால், தங்களது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு உறுதியாகத் தெரிவித்திருக்கின்றன. தமிழக அரசு மட்டும் ஏன் தயங்குகிறது?