நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்க லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு : அசாம், திரிபுராவில் துவங்கியது

Tamil_News_large_950206

புதுடில்லி : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16வது லோக்சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று துவங்கி உள்ளது. முதல்கட்டமாக அசாம் மற்றும் திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

லோக்சபா தேர்தல் :
16வது லோக்சபாவிற்கான தேர்தல் ஏப்ரல் 7ம் துவங்கி மே 12ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 81.45 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் லோக்சபாவிற்கான 543 உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ளனர். மொத்தம் 9 கட்டங்களாக நடத்தப்பட உள்ள இந்த தேர்தலின் முடிவுகள் மே 16ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பின் மத்தியில் புதிய அரசு பதவியேற்கும்.
வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த லோக்சபா தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேர்தல் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தற்போது முதல் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த தேர்தலில் தான் முதல் முறையாக நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 36 நாட்கள் தேர்தல் நடத்தப்பட உள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட உள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு பின் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட உள்ளது.

தேர்தலின் சிறப்புக்கள் :
முதல் முறையாக அதிக கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது, தற்போதைய லோக்சபா தேர்தலின் சிறப்பம்சமாகும். 2009ம் ஆண்டு 5 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 82 கோடி பேர் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில் 10 கோடி பேர் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ளனர். நாடு முழுவதும் 9,30,000 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பணிக்காக 1.1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14,68,430 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
அசாம், திரிபுரா தேர்தல் : அசாமில் 5 லோக்சபா தொகுதிகளுக்கும், திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாமில் 64,21,004 வாக்காளர்களும், திரிபுராவில் 12,48,547 வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர். காங்கிரஸ், பா.ஜ., ஆம் ஆத்மி, அசோம் கானா பரிசித், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்ட 10 முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. மொத்தம் 64 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அசாம் மற்றும் திரிபுராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவம் நியமிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP