ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கரோனா பெருந்தொற்று இன்னும் விடைபெறாத நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டி, உலக மக்களின் உற்சாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்வையாளர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதும் இந்தப் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு மூலம் உலகெங்கும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக நீரஜ் சோப்ரா மூலம் தடகளத்தில் தங்கப் பதக்கம், ஹாக்கியில் வெண்கலம், பி.வி.சிந்துவின் வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்க அணி, இந்த முறை 113 பதக்கங்களை வென்று, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. சீன அணி அதற்குக் கடுமையான போட்டியாகத் திகழ்ந்தது. இப்படி வழக்கமான பதக்க வேட்டைகள், சிறந்த விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளின் விளையாட்டுத் திறன் போன்றவை கவனத்துக்கு வந்த அதேநேரம், உலகம் ஒற்றைத்தன்மை கொண்டதல்ல, பன்மைத்தன்மை நிறைந்தது என்பதை இந்த ஒலிம்பிக் போட்டி மீண்டும் ஒருமுறை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா மூலமாக ஏற்கெனவே கவனம் பெற்றிருந்த விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளின் மனநலம், பிரபல அமெரிக்க ஜிம்னாசிய வீராங்கனை சிமோன் பைல்ஸ் மூலமாக மீண்டும் கவனம் பெற்றது. அதிகப் பதக்கம் வெல்லும் சாதனைகளைப் புரிவார் என்று கருதப்பட்ட சிமோன் பைல்ஸ், மனநலத்தைக் காரணம் காட்டி சில போட்டிகளிலிருந்து விலகினார். எவ்வளவு உடல்வலுவும் விளையாட்டுத் திறனும் புகழும் பெற்றிருந்தாலும்கூட ஒருவருக்கு மனநலம் எவ்வளவு முக்கியமானது என்பதை இவர்களுடைய செயல்பாடுகள் கவனப்படுத்தியுள்ளன. விளையாட்டு அதிகாரிகளும் அதைக் கணக்கில் எடுக்கத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். இந்த ஒலிம்பிக்கில் பெண்களின் விளையாட்டுத் திறன் துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. அதேநேரம், மாற்றுப் பாலினத்தவர்களின் திறன்களும் கவனம் பெற்றுள்ளன. வெளிப்படையாகத் தங்கள் மாற்றுப் பாலின அடையாளங்களை அறிவித்துப் பங்கேற்ற 182 பேரில் பலர் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஒலிம்பிக்கில் பல வீரர்/வீராங்கனைகள் அடிப்படை மனிதப் பண்புகளான அன்பு, கனிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார்கள். அதற்குச் சிறந்த உதாரணம் உயரம் தாண்டும் வீரர்கள் கத்தாரின் மாதஸ் இஸ்ஸா பர்ஷிம், இத்தாலியின் ஜமர்கோ தம்பேரி. இருவரும் ஒரே உயரத்தைத் தாண்டியிருந்த நிலையில், கூடுதல் உயரத்தைத் தாண்டி ஒருவர் மட்டும் தங்கப் பதக்கத்தைப் பெறுவதற்கு மாறாக, விதிமுறைகளின்படி தங்கப் பதக்கத்தை இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர். உலகம் நெருக்கடியான காலத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் இதுபோல் அடிப்படை மனிதப் பண்புகள் மீண்டும் கவனம் பெறுவதுதான் இந்த ஒலிம்பிக் நிகழ்த்தியுள்ள மிகப் பெரிய சாதனை.