வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்

politicalதமிழக கட்சிகளின் பிரசார அணுகுமுறையிலும், தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும், திடீர் மாற்றங்கள் தென்படத் துவங்கி உள்ளன.மத்திய ஆட்சியில் அ.தி.மு.க., இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும், அதனால், தமிழகம் பெறப் போகும் நலன்கள் பற்றியும், பிரசாரத்தில், தமிழக முதல்வர், ஜெயலலிதா முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளார். தி.மு.க.,வையும், அதன் தலைவரையும் சாடுவதற்கு தரப்படும் முக்கியத்துவத்தை ஜெயலலிதா குறைத்துள்ளதை போலவே, தி.மு.க.,வின் பிரசார யுக்தியும் மாறியுள்ளது. ‘மத்தியில் மதச்சார்பற்ற, நிலையான ஆட்சி அமைய தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்’ என, அக்கட்சியின் பொருளாளர், ஸ்டாலின் பேசி வருகிறார்.

தமிழகத்தின், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும், அடுத்த மாதம், 24ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் களத்தில், ‘நாளைய பிரதமர்’ என்ற முழக்கத்துடன், அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா முன்னிறுத்தப்படுவார் என, ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. புதுச்சேரி உள்ளிட்ட, 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஜெயலலிதா, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.எந்த ஊராக இருந்தாலும், பிரசாரத்தை முடித்து, இரவோடு இரவாக, ஆகாய மார்க்கத்தில் அவர் சென்னை திரும்பும் விதத்தில், அவரின் பிரசாரப் பயணம் வகுக்கப்பட்டுள்ளது. விமானம், ஹெலிகாப்டர், கார், பிரசார வேன் என, அத்தனை போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி, ஒரு நாள் கூட விடாமல், தொகுதிகளை சுற்றி வரும் ஜெயலலிதா, கடந்த, இரண்டு நாட்களாக சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார்.

முடக்கியது ஏன்?
இதுவரை அவர் சுற்றிய இடங்களிலும், பேசிய பேச்சிலும், நாளைய பிரதமர் என்ற வார்த்தையை அவர் மறந்தும் உச்சரிக்கவே இல்லை. அவரது கட்சி பேச்சாளர்களும் கூட, இப்போது அதை அதிகமாக வலியுறுத்துவதும் கிடையாது. தமிழக மக்கள் மத்தியில், ஜெயலலிதா பிரதமராவதற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்காது என்பதை அறிந்த பிறகே, இந்த முழக்கத்தை முடக்கி வைத்துள்ளனர்.

இது, ஆளும் கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட முதல் மாற்றம்.இதையடுத்து, அவர் செல்லும் இடங்களில் எல்லாம், தி.மு.க., வையும், அதன் தலைமையையும் கடுமை யாக தாக்கிப் பேசினார். அவரது, ‘அட்டாக்’ பட்டியலில் காங்கிரசுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.இப்போது, அதிலும் மாற்றங்கள் செய்துள்ளார் ஜெயலலிதா. நடப்பது லோக்சபா தேர்தல் என்பதால், மத்தியில் ஆட்சிஎப்படி அமைய வேண்டும்… அதில், அ.தி.மு.க., ஏன் இடம்பெற வேண்டும்… என்பதை, மக்கள் மத்தியில் விளக்கத் துவங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக தாக்கிய ஜெயலலிதா, பா.ஜ., விஷயத்தில் அடக்கி வாசிக்கிறார் என்ற புகார், எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்டுள்ளது.அதற்கு பதிலளிக்காமல் பிரசாரத்தை தொடர்ந்த ஜெயலலிதா, இப்போது, ‘மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமைத்தாலும், அதில், அ.தி.மு.க., இடம்பெற வேண்டும்’ என, பேசுகிறார்; அதற்கான அவசியத்தையும் எடுத்துக் கூறி வருகிறார்.அதற்கு காரணம், தேர்தல் முடிவுகள் வரும் வரை, எல்லா வாய்ப்புகளையும் அலச வேண்டி வரும் என்று கருதுகிறார் போலும்.

திசை மாறுகிறது
இதற்கு பதிலடி தர வேண்டிய முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., சார்பில், அதன் பொருளாளர் ஸ்டாலின் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். அவர் வழக்கம் போல், அ.தி.மு.க., ஆட்சியின் குறைகளை பட்டியலிட்டு வருகிறார். ஜெயலலிதா பேச்சுக்கு பதிலாக, தி.மு.க., ஆட்சியில் செய்த பணிகள் பற்றியும் பேசுகிறார்.ஆனால், வரவிருக்கும் மத்திய ஆட்சி குறித்த, தி.மு.க., நிலைப்பாடு பற்றி முதலில் தெளிவின்றி இருந்த அக்கட்சியின் பிரசாரமும் இப்போது திசை மாறி இருக்கிறது.மத்தியில் மதச்சார்பற்ற, நிலையான ஆட்சி அமைப்பது தான்

Advertisement

தி.மு.க.,வின் இலக்கு என்பதை, சென்னை கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார்.அதற்காக, ‘நன்றி மறந்த காங்கிரசைமன்னிக்கவும் தயார்’ எனக் கூறி இருக்கிறார். கூட்டணியில் இடமில்லை என, துரத்தியடித்த, தி.மு.க., இப்போது, காங்கிரசை ஏற்க முன்வந்திருப்பது, அறிவாலய வட்டாரத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம் என்பதும் உறுதியாகியுள்ளது. காங்கிரசை ஏற்காவிட்டால், வரவிருக்கும் மத்திய ஆட்சி குறித்து, தி.மு.க.,வின் இலக்கு தெளிவற்றதாகி விடும் என்ற பயம் தான், இந்த மாற்றத்திற்கான பின்னணி.
இதற்கிடையில், பா.ஜ., தலைமையில் அணி சேர்ந்துள்ள கட்சிகளின் பிரசாரம் எல்லாமே, மோடியை பிரதமராக்குவதாக தான் உள்ளது. இந்த அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், இதுவரை தாங்கள் வலியுறுத்திய விஷயங்களை கூட, பிரசாரத்தில் பயன்படுத்தாமல், மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி நிச்சயம் என, வலியுறுத்துகின்றன.அடுத்த சில நாட்களில், தேர்தல் பிரசார வேகம் சூடுபிடிக்கும் போது, கட்சிகளின் பிரசார அணுகுமுறைகளில் இன்னும் தெளிவு பிறக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
– நமது சிறப்பு நிருபர் –

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP