in , ,

இலங்கையில் ஜனநாயகத்துக்கு வெற்றி!

sri_lanka electionஅதிபர் பதவிக்காலம் 2016 ஜனவரியில்தான் முடியப்போகிறது என்றாலும், இலங்கை மக்கள் மூன்றாவது முறையாகவும் தன்னையே அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாரானார் மகிந்த ராஜபக்ச. அவர் தேர்தலுக்குத் தயாரானபோது, களத்தில் அவரை எதிர்த்து நிற்க வலுவான வேட்பாளர் என்று எவருமே இல்லை. 2009-ல் விடுதலைப் புலிகளைப் போரில் வென்ற சாதனையே தன்னைத் தொடர்ந்து வெற்றிபெறச் செய்துவிடும் என்று அவர் நம்பினார்.

மைத்ரிபால யாப்பா சிறிசேனா (63) அவருடைய அமைச்சரவையிலேயே சுகாதாரத் துறை அமைச்சராக முன்னர் பதவி வகித்தவர். ராஜபக்சவை எதிர்த்து, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் களத்தில் இறங்கியபோது, ராஜபக்ச சற்றே வியப்பில் ஆழ்ந்தார். அதே சமயம், தன்னை எதிர்க்க வலுவான வேட்பாளர் கிடைக்காமல் சிறிசேனாவை நிறுத்தியிருப்பதால் தன்னுடைய வெற்றி நிச்சயம் என்றே கருதினார். ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் எப்போதும் தனது துதிபாடிகளால் சூழப்பட்ட ராஜபக்சவுக்கு மக்களிடையே தன் மீது வெறுப்பு அதிகரித்துவருவது தெரியாமல் போய்விட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றிருந்தாலும், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களுடைய வாழ்க்கையில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்ப ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையையும் எடுக்காததுடன் தமிழர்களுடைய நிலங்களை நிரந்தரமாகக் கைப்பற்றும் உத்தியுடன் அவர் செயல்பட்டது தமிழர்களுடைய நிரந்தர எதிர்ப்பையே சம்பாதித்துத் தந்தது.

போர்க் குற்றங்கள்குறித்து நியாயமாக விசாரணை நடத்தாதது, வடக்கை முழுக்க முழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருந்தது, கல்வி, வேலைவாய்ப்பில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது, தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களைத் தீவிரமாக ஊக்குவித்தது, வடக்கு மாகாண அரசுக்கு உரிய அதிகாரங்களைத் தர மறுத்தது என்று அவருடைய ஆட்சியில் தமிழர் விரோத நடவடிக்கைகளே அதிகமாக இருந்தன.

இன்னொரு முக்கியமான சிறுபான்மைக் குழுவினரான முஸ்லிம்களையும் சிங்களப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்கி, துன்புறுத்தியதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததால் அவர்களும் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தனர். வாக்களிப்புக்குச் சில நாட்களுக்கு முன்னால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து விலகியது இதற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

ராஜபக்ச மீதான வெறுப்புதான் மைத்ரிபால சிறிசேனாவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. அதே நேரத்தில், நாட்டின் வடக்கிலிருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள மாட்டேன் என்று அதிபராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே அறிவித்திருந்தது அவரும் பழைய பாதையில்தான் செல்வாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து அவருடன் வெளியேறிய சிலர் அளித்த உறுதியான ஆதரவுதான் சிறிசேனாவைத் தேர்தல் களத்தில் நிறுத்த உதவியது. முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அவரை ஆதரித்தது. ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டபடி, அக்கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவைப் பிரதமராக நியமித்து, அவரும் பதவி ஏற்றுக்கொண்டுவிட்டார். புத்த பிட்சுக்களின் செல்வாக்குமிகுந்த ‘ஜாதிக ஹேல உருமய’ என்ற கட்சியும் சிறிசேனாவை ஆதரித்தது. சிங்களர்களில் சரிபாதியினர், தமிழர்கள், முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் ஆதரவில் 51.28% வாக்குகளைப் பெற்று சிறிசேனா அதிபராகியிருக்கிறார்.

“நாட்டின் நிர்வாகத்துக்குத் தேவைப்படும் சட்டங்களைத் தானே இயற்றிக்கொள்ளும் அளவுக்குச் சக்தி படைத்த இப்போதைய அதிபர் பதவியின் அதிகாரங்களைக் குறைப்பேன், பிரிட்டனிலும் இந்தியாவிலும் இருப்பதைப்போலப் பிரதமர் பதவிக்கு அதிக அதிகாரம் வழங்கும் (வெஸ்ட் மினிஸ்டர் முறை) நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு மாறுவேன், நாட்டின் அதிபராக ஒருவர் இரண்டு முழுப் பதவிக் காலத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற பழைய சட்டத்தை மீண்டும் அமலுக்குக் கொண்டுவருவேன்” என்று தேர்தலுக்கு முன் சிறிசேனா வாக்குறுதி தந்திருந்தார். இனி, அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.

ராஜபக்சவின் குடும்ப ஆதிக்கத்தால் நாட்டின் நிர்வாகம் மிகவும் சீர்கெட்டிருக்கிறது. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. தொழில்வளர்ச்சி மந்தமாக இருக்கிறது. வெளிநாட்டு முதலீடும் பெருகவில்லை. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டுவந்ததால் நாட்டின் பொருளாதாரமும் தேங்கிக் கிடக்கிறது. ராணுவத்துக்கும் ராணுவக் கொள்முதல்களுக்கும் முக்கியத்துவம் தந்ததால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி போதவில்லை.

விலைவாசி உயர்வு மக்களுடைய வாங்கும் சக்தியை வெகுவாகக் குறைத்துவிட்டது. விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தபிறகு நாட்டின் விவசாயம், தோட்டத் தொழில், தொழில்வளம், சுற்றுலாத் தொழிலில் அக்கறை காட்டப்பட்டிருந்தால் நிலைமை மேம்பட்டிருக்கும். அடுத்துவரும் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டியது இந்தப் பிரச்சினைகளில்தான்.

சிறிசேனா செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. தமிழர் கட்சிகள் வலியுறுத்தும் போர்க்குற்ற விசாரணை நடவடிக்கையைப் புதிய அரசு நேர்மையாக மேற்கொள்ள வேண்டும். தமிழர்களை மீண்டும் அவர்களுடைய பகுதிகளில் குடியமர்த்த வேண்டும். அவர்களுடைய விவசாய நிலங்களை அவர்களுக்கே திருப்பித் தர வேண்டும். தமிழர்களும் சிங்களர்களும் முஸ்லிம்களும் சமரசமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மலையகத் தமிழர்களுக்கு இலங்கைக் குடியுரிமையை அளித்து, அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியையும் வளத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் புதிய அரசைப் போலவே இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. இந்த முத்தரப்பு உறவுகளில் சரியாக எடுத்து வைக்கும் அடிகள்தான், ஈழத் தமிழர் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்.

-தி இந்து

காட்சியும் மாறுமா? இலங்கையின் தேர்தல் முடிவுகள்!

காந்தி சகாப்த உதயம்!