தவிடு பொடியான விஜயகாந்தின் முதல்வர் கனவு: பா.ஜ., ஏற்றம்; இனி தே.மு.தி.க., கரையேறுவது கடினம்

Vijayakanth dream of powder

முதல்வர் பதவிக்கு குறி வைத்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டு வந்த திட்டங்கள், லோக்சபா தேர்தல் படுதோல்வி மூலம் தவிடு பொடியாகியுள்ளது. இனி, தே.மு.தி.க., கரையேறுவது கடினம் என்ப தால், அக்கட்சியில் இருந்து, வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தனித்தே போட்டி

கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல்கள் உட்பட பல சட்டசபை இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தனித்தே போட்டியிட்டது.இதன் மூலம், அக்கட்சிக்கு எட்டு சதவீதம் முதல் 10 சதவீத ஓட்டு வங்கி இருப்பதை அக்கட்சி நிரூபித்தது. ஆனால், இத்தேர்தல்களில் தே.மு.தி.க.,விற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.’லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்’ என, கட்சி நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், காங்.,- – தி.மு.க., – -பா.ஜ., என, மூன்று கட்சிகளிடம் மிக நீண்ட நாட்களாக விஜயகாந்த் பேரம் நடத்தினார். இறுதியாக பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தார்.இக்கூட்டணியில், பா.ம.க.,- – ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. கூட்டணி அமைப்பது வரையில், இக்கட்சிகளுடன் எதிர்ப்பு அரசியலை நடத்தி வந்த தே.மு.தி.க., திடீரென கூட்டணி அமைத்ததை மூன்று கட்சியினராலும் ஜீரணிக்க முடியவில்லை. இருப்பினும், கட்சி தலைமை உத்தரவை ஏற்று தேர்தல் பணிகளை நிர்வாகிகள் மேற்கொண்டனர்.ஆனால், தேர்தல் முடிவில், தே.மு.தி.க., போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இதுமட்டுமின்றி, தனித்து போட்டியிட்டபோது கிடைத்த ஓட்டுகளைவிட, குறைந்த ஓட்டுகளையே அக்கட்சி வேட்பாளர்களால் பல தொகுதிகளில் பெற முடிந்தது.வட மாவட்டங்களில், பா.ம.க., மூலம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என, விஜயகாந்த் பெரிதும் நம்பினார். இதனால், பா.ம.க., கேட்ட தொகுதிகளையும் விஜயகாந்த் விட்டுக் கொடுத்தார். தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றும் பிரேமலதா பிரசாரம்கூட செய்தார்.

தோல்வி
இருப்பினும், பா.ம.க., செல்வாக்கு பெற்ற சேலம் தொகுதி யில் போட்டியிட்ட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷாலும் கூட வெற்றி பெற முடியவில்லை. இதன் மூலம் தே.மு.தி.க.,- – பா.ம.க., கூட்டணியை வடமாவட்ட கட்சியினரும் மக்களும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து உள்ளது தெரிய வந்துள்ளது.இந்த தோல்வியால், 2016ல் தமிழகத்தில் முதல்வர்பதவியை பிடிக்கும் எண்ணத்துடன் விஜயகாந்த் போட்டு வைத்திருக்கும் திட்டமும் தவிடு பொடியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின் தே.மு.தி.க., இனி அரசியலில் கரையேறுவது கடினம் என்ற மனநிலை, கட்சியின் மிச்ச சொச்ச எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், அக்கட்சியில் இருந்து வெளியேறி, மாற்று கட்சிகளில் இணைய கட்சியினர் பலரும் ‘ரூட்’ போட்டு பேரம் பேச ஆரம்பித்திப்பதாக, செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கிறது.

தே.மு.தி.க.,வுக்கு இழப்பு; தக்க வைத்த தி.மு.க.,
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், ஐந்து முனை போட்டி ஏற்பட்டதால், அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அ.தி.மு.க., தனித்து போட்டியிட, தி.மு.க.,வோ, தலித் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிட்டது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த காங்கிரஸ் தனித்து விடப்பட்டது.ஒவ்வொரு கட்சியும் தங்களது ஓட்டு சதவீதத்தை உயர்த்தவும், குறைந்தபட்சம் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும், பிரசார களத்தில் தீவிரமாக செயல்பட்டனர். சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து அரசியல் பயணம் செய்யும், தே.மு.தி.க., – பா.ம.க., ஆகிய கட்சிகளோ இந்த தேர்தலில் தங்களது ஓட்டு சதவீதத்தை உயர்த்தி விட வேண்டும் என்ற வேட்கையில் களப்பணி ஆற்றினர்.குறிப்பாக, இந்த தேர்தலில் பெறும் ஓட்டு சதவீதத்தை வைத்து தான், சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதே கணக்கு. ஒவ்வொரு கட்சியின் உண்மையான ஓட்டு சதவீதமும் தெரிய வரும் என்பதால், அரசியல் கட்சியினர் மத்தியில் தேர்தல் முடிவுக்கான எதிர்பார்ப்பு எகிறியது.ஆனால், எதிர்பார்க்காத வகையில், 10 சதவீதம் வரை ஓட்டு வங்கியை வைத்திருந்த, தே.மு.தி.க., தான் போட்டியிட்ட, 14 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கூடவே, இந்த தேர்தலில் அக்கட்சியின் ஓட்டு சதவீதம், 5.2 சதவீதமாக குறைந்தது. ஆனால், தமிழகத்தில் சராசரியாக, 2 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்ற பா.ஜ.,விற்கு, இந்த தேர்தலில், 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.இப்படி, தே.மு.தி.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்தும், பா.ஜ.,விற்கும் உயர்ந்தும் உள்ளது. அதே வேளையில், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய போதிலும், தி.மு.க., தன் ஓட்டுவங்கியை தக்க வைத்துள்ளது. முந்தைய தேர்தல்களில், சராசரியாக, 25 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ள தி.மு.க., இந்த தேர்தலில், 23.3 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP