இந்தியா, தொழில்நுட்பம், தேர்தல், விமர்சனம்

மின்னணு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு சந்தேகங்கள் தீருமா?

100 கோடி வாக்காளர்களை நெருங்கி கொண்டிருக்கும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது கடினம். வாக்குச்சீட்டு முறையில் வாக்குகளை எண்ணி முடிக்க 2 தினங்கள் வரை காத்திருக்க வேண்டும். மேலும் வாக்குச்சீட்டு முறையில் செல்லாத வாக்குகள் எப்போதுமே ஒரு பெரும் பிரச்னையாக உள்ளன. இதையடுத்தே தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்னணு இயந்திர நடைமுறை இந்தியாவில் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் மின்னணு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடந்த நாளில் இருந்தே, அதன் மீதான சந்தேகங்களும் குறைந்தபாடில்லை. வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரத்தில் மின்னணு இயந்திரங்களில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை பரிசோதிக்க, விவிபேட் ஒப்புகை சீட்டுக்களும் உள்ளன. இந்த ஒப்புகை சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணுவதும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது.

தற்போது டெஸ்லா நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான அமெரிக்காவின் எலான் மஸ்க், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஒன்றிய ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வேண்டுமானால் ஹேக் செய்யலாம். இந்தியா போன்ற நாடுகளில் மின்னணு இயந்திரங்கள் எந்தவொரு நெட்வொர்க்குடன் தொடர்பில்லாதவை.

எனவே அவற்றை ஹேக் செய்வது இயலாது என அவர் பதில் தெரிவித்துள்ளார். அதற்கு எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஹேக் செய்யலாம் என்று மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார். எலான் மஸ்க் கிளப்பியுள்ள புயல் இப்போது இந்தியா முழுவதும் வீச ெதாடங்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றன. இந்தியாவின் கருப்பு பெட்டிகள் என இவிஎம் இயந்திரங்களை ராகுல்காந்தி வர்ணிக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் பாஜவை கிழித்து தொங்க விட்ட அகிலேஷ் யாதவும் வாக்குசீட்டு முறையே பாதுகாப்பானது என்கிறார். இவை ஒருபுறம் இருக்கட்டும். தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகங்களை பெருமளவில் குறைக்கலாம். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையம் ஒன்றிய ஆளும்கட்சியின் கைப்பாவையாக உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்பே பிரதமர் மோடி தமிழகத்தை அடிக்கடி சுற்றி வந்து 3 கட்ட பிரசாரத்தை நடத்தி முடித்து விட்டார்.

தமிழக வாக்காளர்கள் சந்தேகப்பட்டது போலவே, முதல்கட்ட தேர்தல் தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதிகள் அறிவிப்புகள் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வரை தேர்தல் ஆணையம் யாரோ சிலரின் ஆலோசனை பெற்று செயல்பட்டது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. மக்களவை தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா வேட்பாளரின் வெற்றியில் கூட சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தை செல்போன் ஓடிபி மூலம் அன்லாக் செய்ததாக அங்கு பிரச்னை எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொண்டால், சந்தேகங்களுக்கு தீர்வு கிட்டும்.

https://www.dinakaran.com/doubts_cleared/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *