நாட்டின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டு களாகவே மந்தநிலையில் நீடித்து வருகிறது. வளர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நரேந்திர மோடி தலைமையில் முதன் முதலாக கடந்த 2014ம் ஆண்டில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாட்டின் பொருளாதார அடிப்படை கட்டமைப்பான திட்ட கமிஷனை கலைத்தது.
திட்ட கமிஷன் இல்லாததால் நாட்டில் என்ன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. செயல்படுத்தப்படுகின்றன அவற்றுக்கு எந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது எல்லாம் மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதேபோல், மாநில அரசுகளும் தங்களது திட்டங்களுக்கு நிதி பெற முடியாமல் போய், நிதி ஆயோக் என்ற அமைப்பு ஒதுக்கும் நிதி ரகசியமானதாக மாறிவிட்டது.
இதன் பின்னர் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று தனியார்மயமாக்குவதில்தான் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. இதுபோன்று அரசு வங்கிகளின் வராக் கடன் சுமை அதிகரித்து வங்கி முறையே முடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. ஒவ்வொரு வங்கியாக திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது, அவசர கோலத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிட்டது. இந்த நிலையில், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதை நிறுத்தியதோடு, கொடுத்த கடனை வசூலிக்க முடியாமலும் முடங்கிவிட்டன. தொழில் துறை தடுமாறியதால் வேலைவாய்ப்பு அறவே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இவை எல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
பொதுமக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசு வங்கிகளிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் சேமித்தும் முதலீடு செய்தும் வருகின்றனர். அரசு வங்கிகளில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் தற்போது கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்படுவதால் மக்கள் பணத்தை கையில் வைத்திருப்பதற்கும் வங்கியில் சேமிப்பதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மிகப் பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மக்களை கதி கலங்க வைத்துள்ளது.
இந்த சிக்கலில் இருந்து வங்கியை மீட்டுவிடுவோம் என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் அதில் நம்பிக்கை இல்லாமல்தான் மக்கள் இருக்கின்றனர்.
அரசின் பொருளாதாரக் கொள்கை நம்பிக்கை அளிப்பதாக இல்லை, பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக நாட்டில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மக்கள் நம்பிக்கையுடன் சேமிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.