அவசர மகப்பேறு வசதியில்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வட்டார மருத்துவ அலுவலர்களை வட்டார சுகாதார அலுவலர்களாக நியமன பதவியாக மாற்ற வேண்டும். மகப்பேறு மரண விகிதத்தை 10 ஆக குறைத்திட, அவசர மகப்பேறு வசதியில்லா ஆரம்ப சுகாதார நிலைய அளவில் பிரசவங்களை கட்டாயப்படுத்தக்கூடாது. கிராம சுகாதார செவிலியர்கள் முதன்மை பணியான தாய் – சேய் நலத்தில் முழு கவனமும் செலுத்தும் வகையில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை திட்டத்தை பழையபடி சமூக நலத்துறையின் கீழ் மாற்றினால், மகப்பேறு மரண விகிதம் 10 ஆக குறைக்க உதவும்.