சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை கடந்த 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த தகவல்களை் வீடு வீடாக கடந்த ஒரு வாரமாக வழங்கி வருகின்றனர். முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இதன்மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாார். மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே வீடு வீடாக சென்று, இந்த திட்டத்தில் பயன்பெற என்னென்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும், என்னென்ன திட்டங்கள் முகாம்களில் தீர்வு பெற முடியும் என்பது குறித்து விரிவாக தன்னார்வலர்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையான ஆவணங்களை எடுத்துவந்துவிட்டால், முகாம்களுக்கு வந்து ஏமாற்றம் அடைய தேவையில்லை. 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, ஒரு மாதம் வரை சிறப்பு முகாம் நடைபெறும். அதன்படி, மொத்தம் 3,562 முகாம் நடைபெறும். நகர்ப்புற பகுதிகளில் 1,428 முகாம்களும், ஊரக பகுதிகளில் 2,135 முகாம்கள் நடைபெறும். இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் தன்னார்வலர்கள் 28,370 ஈடுபடுவார்கள். அடுத்தடுத்த மாதங்களில் 2ம் கட்ட, 3ம் கட்ட முகாம் நடைபெறும். இந்நிலையில் முகாம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post ‘உங்களுடன் ஸ்டாலின்’ புதிய திட்டம் ஒரே நாளில் 1.25 லட்சம் மனுக்கள்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 50,000 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.