தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானையை சுற்றி வந்து செல்பி எடுத்ததாலேயே யானை கோபமடைந்து, இருவரை தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. அந்த யானை தற்போது அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பளுகலை சேர்ந்த கி.சிசுபாலன் (59) ஆகிய இருவரையும் யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.