தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 17 நாட்களாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. நீர்வரத்து குறைந்ததையடுத்து ஒகேனக்கலில் பரிசல் இயக்க கலெக்டர் சதீஸ் நேற்று அனுமதி வழங்கினார். ஆனால், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. நேற்று விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், பரிசல் ஓட்டிகள் ஒரு மணி நேரம் மட்டுமே பரிசல்களை இயக்கினர். அதன் பின், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ‘ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து இருந்தால், மாமரத்துகடவு பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும், 30 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்தால், ஊட்டமலை பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும், 50 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்தால், மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளான கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும் அனுமதியளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்,’ என்றனர். அதிகாரிகள் பேசியும் சமாதானம் ஏற்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 20,500 கனஅடியாக சரிந்ததால் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மூடப்பட்டது.
The post ஒகேனக்கலில் 17 நாளுக்கு பின் அனுமதி பரிசல் ஓட்டிகள் ஸ்டிரைக் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.