இன்றைய இருபத்தொன்றாவது நூற்றாண்டு, மனிதர்கள் இடையறாத வேகத்தில் இயங்கி கொண்டிருக்கும் நூற்றாண்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்வோம். ஆனால், எந்தவிதமான கடின உழைப்புமின்றி வசதியாக வாழ்வதற்கேற்ற வாய்ப்புகளை தேடியும் அலைந்து கொண்டிருக்கின்றோம். இது ஒருபுறமிருக்க, மனிதனின் அறிவும் திறமையும் வளர, வளர அவனது உடல் உழைப்பிற்கான தேவைகள் குறைந்துகொண்டே வருகின்றன. இது மானுடத்தின் வெற்றி என எடுத்துக்கொண்டாலும், உழைப்பு என்பது வெறும் உடல் உழைப்பு மட்டுமில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். உழைப்பு என்பது மனதாலும் உடலாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் முயற்சியாகும்.
அந்தவகையில் இன்றைய இளைஞர்களுக்கு உழைப்பின் அருமையை எடுத்துரைக்கும் வகையில் சென்னை, கோபாலபுரம் தெருக்களில் பால் மற்றும் தினசரி நாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ‘பேப்பர் தாத்தா’ என அழைக்கப்படும் சண்முக சுந்தரம் தன்னம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னையின் இயந்திர வாழ்க்கைக்கு இடையே அமைதியான அதிகாலைப் பொழுதில் மக்கள் அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், அதிகாலை 3.30 மணிக்கே கண்விழித்து இல்லத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளை எடுத்துச்சென்று அதனை விநியோகம் செய்கிறார் சண்முக சுந்தரம்.
இதன் பின்னர், தமிழ் மற்றும் ஆங்கில தினசரி நாளேடுகளை தன்னுடைய சைக்கிளில் வைத்தப்படி கோபாலபுரம், பத்மாவதி சாலை, அவ்வை சண்முகம் சாலை என பல்வேறு பகுதிகளுக்கு சென்று பம்பரமாக சுழன்று தள்ளாத வயதிலும் செய்தித்தாள்களை சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கின்றார். முதல் பணிக்கும், இரண்டாவது பணிக்கும் இடையிலான நேரம் என்பது ஒரு தேநீர் அருந்தும் நேரம் என்கிறார் பேப்பர் தாத்தா.
அந்த இடைவெளியில் 94 வயதிலும் தொய்வு இல்லாமல் உழைத்து கொண்டு தன்னுடைய சொந்தக் காலில் நிற்கும் பேப்பர் தாத்தாவிடம் நாம் பேசுகையில் அவர் கூறியதாவது:
சென்னை ராயப்பேட்டையை பூர்வீகமாக கொண்ட எங்களது குடும்பம் தலைமுறை கடந்து அங்கு வசித்து வருகிறோம். கடந்த 1931ம் ஆண்டு பிறந்த எனக்கு, சிறு வயது முதலே படிப்பின் மீது ஆர்வம் மிகுதி. அதன் காரணமாக ராயப்பேட்டை வெஸ்லிபள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்றேன். பின்னர் குடும்ப சூழ்நிலையால் படிப்பை இடைநிற்றல் செய்தேன். இதன் பின்னர் எனது இளமைக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தேன். குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சார்ந்த தனியார் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றினேன். இதன் பின்னர் நாமே தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 1960 தொடக்கக்காலத்தில் சுயமாகவே தொழில் தொடங்கி அதில் 10 பேருக்கு வேலை தரும் அளவிற்கு தகுதியை உயர்த்தி கொண்டேன். 2000வது ஆண்டில் தொழில் நஷ்டம் ஏற்பட்டு கைவிடக்கூடிய சூழல் என்பது ஏற்பட்டது. அதன் பிறகு பால், தண்ணீர் கேன் மற்றும் தினசரி பத்திரிகைகளை வீடுகளுக்கு போடுவது போன்ற பணியை செய்ய தொடங்கினேன்.
அதன்படி காலை எழுந்தவுடன் குளித்து முடித்து இறைவனை வழிபட்டு விட்டு, நேராக மொத்த விற்பனை கடையிலிருந்து 60 பால் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வீடு வீடாக சென்று விநியோகம் செய்து விடுவேன்.
இதன்பின், தேனாம்பேட்டையில் தினசரி பத்திரிகைகளான அனைத்து பத்திரிகைகளையும் எடுத்துக் கொண்டு கோபாலபுரம் நோக்கி எனது பயணத்தை துவங்குவேன். சுமார் எட்டு தெருக்களில் 60 வீடுகளில் செய்தித்தாள்களை விநியோகித்து வருகிறேன். மழை, வெயில் என எது வந்தாலும் தவறாமல் என்னுடைய பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இந்த பணியை நேசித்து, உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு என்பதை மனதில் வைத்து தினசரி ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு லட்சுமி என்ற மனைவி மற்றும் ஐந்து மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடித்து 10 பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டேன். அவர்கள் என்னை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிய பொழுதும் என்னுடைய குழந்தைகளுக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது, மற்றவர்களின் உதவியை நாடாமலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எனக்கு கிடைக்கும் வருமானத்தில் நானும் எனது மனைவி மட்டும் தனியாக வசித்து வாழ்ந்து வருகிறோம்.
தினசரி பேப்பர் மற்றும் பால் விநியோகம் தொடர்பாக எனக்கு தலைவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் போன்றோர் வீடுகளில் பேப்பர் விநியோகம் செய்தேன். தற்போதும் அதனை செய்து வருகிறேன். அதேபோல் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு பேப்பர் விற்பனை மற்றும் பால் விற்பனை கூடுதலாக இருந்தது. அதன் பின்னர் சற்று அதில் தொய்வு ஏற்பட்டு, 100 வீடுகளில் பேப்பர் வாங்கிய காலம் கடந்து தற்போது 50 – 60 வீடுகளில் மட்டுமே செய்தித்தாள்களை விநியோகம் செய்கிறேன். இருப்பினும் செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் ஒரு தொழிலை நேசித்து மனம் மகிழ்ந்து செய்தால் மட்டுமே அதற்கான நிம்மதி கிடைக்கும்.
அதேபோல நான் மக்களை சுற்றி வருவது தான் என்னுடைய நிம்மதியாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு எனது குடும்பத்தினரும் செய்தித்தாள் மற்றும் பால் விநியோகம் செய்வதை தடுக்கவில்லை. இன்றைக்கும் நான் சைக்கிள் மிதித்து என் பணிகளை செய்து வருகிறேன் என்று சொன்னால் அதற்கு தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் கடின உழைப்புதான் காரணமாக உள்ளது. இன்றைய கால இளைஞர்கள் தொழில்நுட்ப உலகில் தங்களை மூழ்கடித்துக் கொண்டு அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரம் என்ன என்பதை அறியாமலே வாழ்வை கடந்து செல்கின்றனர். அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் நம்மிடம் உற்சாகமாகப் பேசினார்.
தாத்தாவின் கோரிக்கை
பேப்பர் தாத்தாவின் பிரதான கோரிக்கையாக முதியோர் உதவி தொகை வேண்டும் என்பது தான். கடந்த 25 ஆண்டுகளாக இதுவரை முதியோர் உதவி தொகைக்காக அரசிடம் எந்தவித விண்ணப்பமும் அளிக்காமல் இருந்து வந்த தாத்தா தனக்கு மட்டுமின்றி தன்னுடைய 84 வயதான மனைவிக்கும் முதியோர் தொகையை பெறாமல் இருந்து வந்தார். தற்போது வயது மூப்பு மற்றும் பொருளாதார ரீதியாக உதவிகள் தேவைப்படுவதால் தனக்கும், தனது மனைவிக்கும் முதியோர் உதவி தொகை விண்ணப்பிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதனை அதிகாரிகள் விரைந்து பரிசீலனை செய்து உதவி தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பேப்பர் தாத்தா குறித்து கோபாலபுரத்து வாசிகளின் கருத்து
தன்னுடைய 94 வயதிலும் ஓயாமல் உழைக்கும் தாத்தாவின் தன்னம்பிக்கையை பார்த்து புதிய உத்வேகம் பிறக்கும். அவர் இந்த கோபாலபுரத்து மக்களின் ஹீரோ. பால், பேப்பர் மற்றும் தண்ணீர் கேன்களை வீடுவீடாக விநியோகம் செய்து வருகிறார். முன்பு தண்ணீர் கேன்களை வீடு வீடாக விநியோகம் செய்துவந்தார். தற்போது வயது மூப்பு காரணமாக அந்த பணியை அவர் செய்வதில்லை என கேள்விப்பட்டோம். தினசரி காலை தாத்தா தனது சைக்கிளில் இளம் வாலிபர் போல பம்பரம் போல் இந்த கோபாலபுரத்தை சுழன்று வந்து பால் மற்று பேப்பர்களை விநியோகித்து விடுவார். இவரை பார்த்து இன்றைய காலகட்டத்தை சேர்ந்த அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தை தூக்கி எறிந்து உழைப்பை நம்பி செல்பவனுக்கு வாழ்க்கையில் பல உச்சத்தை அடையலாம் என்பதற்கு சான்றாக பேப்பர் தாத்தா எடுத்துக்காட்டாக உள்ளார்.
The post கால்நூற்றாண்டாக கோபாலபுரத்தை கலக்கும் ஹீரோ 94 வயதிலும் தொய்வு இல்லாமல் உழைக்கும் பேப்பர் தாத்தா appeared first on Dinakaran.