*பொதுமக்கள் பீதியில் தவிப்பு
குன்னூர் : அதிகரட்டி அருகே தெருவிளக்குகள் இல்லாமல் இருள் நிலவும் சூழலில் இரவு நேரத்தில் கிராமத்தில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடிக்காடு என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், அதிகரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் முறையான நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் இல்லை என்கிற கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தெரு விளக்கும் பழுதாகியது.
அதனை சரிசெய்ய எடுத்து சென்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் இதுவரை பழுது நீக்கப்பட்டு மீண்டும் அப்பகுதியில் பொருத்தப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. சாலையோர தெருவிளக்குகள் எரிந்தாலும் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 மின் கம்பங்களிலும் தெருவிளக்குகள் பொருத்தப்படாததால் அந்த கிராமம் இருளில் சூழ்ந்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை நடமாடியது. இதனை அப்பகுதியில் வாகனம் நிறுத்திய ஓட்டுநர் தனது வாகனத்தில் இருந்தவாறு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் நெடிக்காடு கிராம மக்கள் மேலும் பீதியடைந்துள்ளனர்.
எனவே வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வரும் சூழலில் அப்பகுதியில் தெருவிளக்குகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து தரவேண்டும் என்றும், வன விலங்குகள் கிராமத்திற்குள் நடமாடுவதை வனத்துறையினர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூர் அருகே அதிகரட்டி பகுதியில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் கிராமத்தில் சிறுத்தை உலா appeared first on Dinakaran.