புதுடெல்லி: அதானி விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான செய்தி இன்று காலை முதல் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களும் எதிர் குற்றச்சாட்டுக்களும் வந்து கொண்டிருக்கின்றன. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும், உணர்வுபூர்வமானதாக மாற்றவும் அவர் முயல்கிறார். 2019-ம் ஆண்டிலும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். காவலரே திருடராகிவிட்டார் என பேசினார். ஆனால், இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று மன்னிப்பு கோரினார். இந்தியாவுக்கும், அதை பாதுகாப்பவர்களுக்கும் எதிராக அவர் தொடுக்கும் தாக்குதல் இது.