சென்னை: ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதுடன், நீதித்துறையிலும் ஏராளமான பெண்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மாநிலத்திற்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்-க்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
அதில் பேசிய தலைமை நீதிபதி ஸ்ரீராம், புகழ்மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்பது மாத பதவிக் காலத்தில் அதிகளவில் கற்றுக் கொண்டுள்ளதாகவும், முழு திருப்தியுடன் விடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழ்நாடு நீதித்துறையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதிகளில் 130 நீதிபதிகள் பெண்கள். இதற்கு மாநிலத்தை பாராட்டுவதாகவும் கூறி, கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறளையும் குறிப்பிட்டுப் பேசினார்.
தலைமை நீதிபதியின் பிரிவு உபச்சார விழாவில், பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றபோதும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் நிர்வாகிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்! appeared first on Dinakaran.