சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் மற்றும் கழிவுகளை முதன்முறையாக நவீன சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் அகற்றி தூர்வாரும் பணியினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் தூர்வாருதல், நீர்வழிக்கால்வாய்களை மேம்படுத்துதல் மற்றும் தூர்வாருதல், புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல்கள் மற்றும் கழிவுகளை விரைவாகவும், முழுமையாகவும் அகற்றி அப்புறப்படுத்திடும் வகையில், முதன்முறையாக நவீன சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, ராயபுரம் மண்டலம், வார்டு-58, ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் நவீன சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மழைநீர் வடிகாலில் உள்ள வண்டல் மண்ணின் அளவை சிறிய வகை ரோபோ மூலம் கண்டறிந்து, நவீன கேமராக்கள் மூலம் வண்டல்கள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு முன்பும், நவீன சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் வண்டல்கள் அகற்றப்பட்ட பின்பும் புகைப்படம் எடுத்து மழைநீர் வடிகால்களில் வண்டல் மண் அகற்றப்பட்டது உறுதி செய்யப்படும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். இந்த மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல் மண்ணை நவீன சக்தி வாய்ந்த சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் அகற்றி, அதனை அருகிலேயே கொட்டாத வகையில் ஒரு குழாயின் வழியாக மூடிய கனரக வாகனத்தில் சேகரித்து, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது.
இந்த இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு ஒரு கிலோ மீட்டர் வரை மழைநீர் வடிகால்களில் தூர்வாரி அப்புறப்படுத்தப்படும். மேலும், தூர்வாரும் வண்டல்கள் அருகில் கொட்டப்படுவது முழுமையாக தவிர்க்கப்படுவதால், மழையின் காரணமாக மீண்டும் மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் சென்று சேர்வது தடுக்கப்படுகிறது. மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல்கள் முழுமையாக தூர்வாரப்படுவதை, தூர்வாரப்படுவதற்கு முன்பும், பின்பும் ரோபோ கேமரா வழியாக புகைப்படம் எடுத்து வண்டல்கள் அகற்றப்படுவது உறுதிசெய்யப்படுகிறது. இதன் காரணமாக மழைநீர் வடிகால்களில் தங்குதடையின்றி மழைநீர் செல்வதற்கு ஏதுவாக அமைவதுடன், அப்பகுதிகளில் மழைநீர் தேக்கமின்றி விரைந்து வடிந்து செல்ல வழிவகை ஏற்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் சராசரியாக 1000 கி.மீ மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு வருகின்றது.
இதில் முதற்கட்டமாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இரண்டு வாகனங்கள் வீதம் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய மூன்று வட்டாரங்களில் 6 நவீன சூப்பர் சக்கர் வாகனங்கள் மூலம் 120 கி.மீ நீளத்தில் மழைநீர் வடிகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ரூ.10 கோடி வீதம் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டலக்குழுத் தலைவர் ராமுலு, மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி தர் மேற்பார்வைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்)முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சென்னையில் முதல்முறையாக நவீன சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.