புதுடெல்லி: பா.ஜ தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி.நட்டா. தற்போது அவர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். நட்டா 2019 ஜுன் மாதம் பா.ஜ தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். 2020 ஜனவரி 20 அன்று, தேசியத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2022 செப்டம்பர் மாதம் 2024 மக்களவைத் தேர்தல் வரை அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. அதன்பின் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் வரை அதாவது 2025 ஜனவரி வரை என்று அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இப்போது பிப்ரவரி முடியப்போகிறது. ஆனால் பா.ஜ புதிய தேசியத்தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. பா.ஜவை பொறுத்தவரை ஒரு தலைவர், ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. எனவே ஒன்றிய அமைச்சராக உள்ள நட்டா தனது தேசிய தலைவர் பதவியை இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால் அவர் யார் என்பதை இன்னும் பிரதமர் மோடி முடிவு செய்யவில்லை அல்லது முடிவு எடுப்பதில் அவருக்கு குழப்பம் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மபி முன்னாள் முதல்வரும், தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அல்லது மகாராஷ்டிரா தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் புதிய தேசிய தலைவர்களாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் அவர்கள் இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் புதிய தலைவர் யார் என்பதில் பா.ஜ முகாமிலேயே குழப்பம் உருவாகி உள்ளது. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய பா.ஜவில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, 12 மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் 6 மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் போதும், புதிய தேசிய தலைவரை தேர்வு செய்துவிடலாம்.
ஆனால் டெல்லி தேர்தலை காரணம் காட்டினார்கள். இப்போது டெல்லியில் புதிய முதல்வர் பதவி ஏற்ற பிறகும் தேசிய தலைவர் தேர்வில் பா.ஜவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மாநில தலைவர்கள் தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு பா.ஜ தலைவராக அண்ணாமலை நீடிக்க, பா.ஜவின் மூத்த தலைவர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரியானா மூத்த அமைச்சரும், அம்பாலா கான்ட் எம்எல்ஏவுமான அனில் விஜ், அங்குள்ள மாநில பா.ஜ தலைவர் மோகன் லால் படோலி மற்றும் முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோரை விமர்சித்து வருகிறார்.
இன்னும் பல மாநிலங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் மாநில தலைவர்களை முடிவு செய்ய முடியவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி நிர்ணயித்த காலத்தில் தேசிய தலைவரை தேர்வு செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் இன்னும் ஒரு சில மாதம் ஜே.பி. நட்டாவே தேசிய பா.ஜ தலைவர் பதவியில் நீடிப்பார் என்று பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
The post ஜே.பி நட்டாவுக்கு பதில் பா.ஜ புதிய தலைவர் யார்?.. முடிவு எடுக்க முடியாமல் திணறும் மோடி appeared first on Dinakaran.