சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர்; தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, பொறியாளர் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகளான சிதம்பரம் (சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி பணிகள்) கோயம்புத்தூர் (கூட்டரங்கு கட்டட பணிகள்) காஞ்சிபுரம் (ஓட்டல் பராமரிப்பு பணிகள்) ராணிப்போட்டை (கவேரிபாக்கம் ஏரி கட்டட பராமரிப்பு பணிகள்) தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் பிரிவில் மதுரை, திருச்சி, சென்னை, போன்ற மண்டல அலகுகளின் வரவு செலவு மற்றும் விருந்தினர்களிடம் விருந்தோம்பல் குறித்த தகவல்களை மண்டல மேலாளர் மற்றும் மேலாளர்களுடன் உரையாற்றி மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விருந்தோம்பல் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார், தொடர்ந்து சுற்றுலா தொகுப்பு செயல் திறன் பற்றியும் தீவுத்திடல் வரவு செலவு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முந்தைய ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மீதான நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவு விடுதிகள், படகு குழாம்கள் மூலமாக அதிக லாபம் ஈட்டும் வகையில், பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் மேலும், தங்கும் விடுதி அறைகளை சிறப்பான முறையில் பராமரித்தல், பொதுமக்களை ஈர்க்கும் வகையான உணவு வகைகளை தயாரித்து வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச. கவிதா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொறியாளர், மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
The post தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் உத்தரவு appeared first on Dinakaran.