திருச்சி: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் வரும் 16ம் தேதி (நாளை மறுதினம்) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்து கடைகளும் இயங்கும்.
அதேபோல் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும். அங்கிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து வசதிகள் தொடரும். தற்போதைக்கு தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூருக்கு வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்து விடுவார்கள். ஆனால் அனைத்து அரசு பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். இவ்வாறு கூறினார்.
The post திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் நாளை மறுதினம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி appeared first on Dinakaran.