திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோட்டில் இன்று அதிகாலை சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தென்காசியில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை நடராஜன் என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. ஒருவழிப்பாதையில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் வலது புறமாக திருப்பியபோது சென்டர் மீடியனில் மோதி பஸ் விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்பூரில் இன்று காலை விபத்து: சென்டர் மீடியனில் மோதிய அரசு பஸ்-10 பயணிகள் காயம் appeared first on Dinakaran.