
சென்னை: தெற்கு ரயில்வேக்கு 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகள் தயாரிப்பதில், பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலை முக்கியமானதாக இருக்கிறது.
இங்கு காலத்துக்கு ஏற்றார்போல, வந்தே பாரத், ‘ஏசி’ மின்சார ரயில்கள், ஜெர்மன் தொழில் நுட்பத்தில், லிங் ஹாப்மென் புஷ் என்ற நவீன எல்எச்பி பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த நிதியாண்டில் 3,000-க்கும் மேற்பட்ட எல்எச்பி பெட்டிகளை தயாரித்து, ரயில்வேக்கு வழங்க உள்ளது.
இதில், தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட உள்ளன. இதுவரை 290 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பெட்டிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறும்போது, ‘ராமேசுவரம், கொல்லம், திருச்செந்தூர் உள்ளிட்ட விரைவு ரயில்களில் இருக்கும் பழைய பெட்டிகள் நீக்கிவிட்டு, எல்எச்பி பெட்டிகளாக மாற்ற வேண்டும்’’ என்றார்.

