*துணை பதிவாளரிடம் கோரிக்கை மனு
குளித்தலை : தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சிபில்ஸ்கோர் முறையை எதிர்த்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.கரூர் மாவட்டம், குளித்தலை வட்டார விவசாயிகள் சார்பாக விவசாயி சுரேஷ் மற்றும் மதியழகன் தலைமையில் கூட்டுறவுத் துறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர்முறையை ரத்து செய்யக்கோரி குளித்தலை பெரிய பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சார் ஆட்சியர் அலுவலகம், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், கடந்த மே 26ம் தேதி கூட்டுறவுத்துறை பதிவாளர் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகின்ற நடைமுறைப்படி இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த ஒன்பது விதிகள் கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கூட்டுறவுதுறையின் தலைமை அலுவலர் உத்தரவு விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியாய் உள்ளது. மேலும் வேளாண்மை என்பது இயற்கை சார்ந்த தொழிலாகும். விவசாயிகள் தன் மூலதனத்தை வெட்ட வெளி நிலத்தில் போட்டுவிட்டு இயற்கை பேரிடர்கள், பருவ கால மாற்றங்கள், இடுபொருள்களின் விலை மாற்றங்கள் ஆகிய நிலை இல்லா தன்மையினால் பயிர் வளர்நிலை இடர்களை தாண்டி பல மாதங்கள் காத்திருந்து போட்ட முதலீட்டை திரும்ப எடுக்கும் வரை இப்படியான பாதிப்புகள் மிக கூடுதலாக வரும் நிலையில் சிபில் ஸ்கோர் தகுதியை அளவீடாக கொண்டு விவசாயிகள் கடனை தீர்மானிக்க கூடாது.
இது வேளாண்மையில் ஏற்படும் இழப்பீட்டை சிபில் ஸ்கோர் அளவீடுகள் கணக்கிடப்பட்டு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தை முதலில் அமல்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வும், தகுதியும் சிபில் ஸ்கோர் வரம்பில் வந்துவிடும். இப்படியான நெருக்கடிகள் தீராத நிலையில் வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீடு ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் முன்னோடி விவசாயிகள் பழையபட்டி ஜெயராமன், ஈஸ்வரன், சண்முகசாமி, தென்னிலை ராஜ், மதியழகன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் முறையை எதிர்த்து விவசாயிகள் கண்டன பேரணி appeared first on Dinakaran.