நல்லம்பள்ளி: தொப்பூர் கணவாயில் மேம்பாலப்பணி நடந்து வரும் நிலையில்,3 மாடி கட்டிடத்தை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் பணி நடந்து வருகிறது. பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதை வழியாக செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை வளைவுகளாகவும், பள்ளமாகவும் உள்ளது. இந்த வழித்தடத்தில் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி பல்வேறு விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் விபத்துக்களை தடுக்க, ஒன்றிய அரசு உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.775 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அப்பணிகள் நடந்து வருகிறது.
அப்பகுதியில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த இழப்பீடு தொகை வழங்கப்பட்டு, அங்குள்ள கட்டிட உரிமையாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை, கட்டிடத்தில் இருத்து எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. மொத்தம் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பவாசிகள் அப்பகுதியில் இருந்து வீடுகளை காலி செய்தனர்.
இந்நிலையில், தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை, தொப்பூர் செக் போஸ்ட் அருகே மூன்று மாடி கொண்ட தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே ‘அலேக்காக’ 100க்கும் மேற்பட்ட ஜாக்கி உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு நகர்த்தும் பணி ஜரூராக நடந்து வருகிறது. 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக 13 அடி வரை கட்டிடம் நகர்த்த ப்பட்டுள்ளது. ஜாக்கிகள் மூலம் 3 மாடி கட்டிடத்தை நகர்த்தும் பணியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கோயில் உள்ளிட்ட கட்டிடங்களையும் இடிக்காமல் இவ்வாறு நகர்த்தலாமா? என்பது குறித்தும் பொதுமக்கள் ஆலோசித்து வருகின்றனர்.
The post தொப்பூர் கணவாயில் மேம்பால பணி: 3 மாடி கட்டிடத்தை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.