
மேட்டூர்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன் முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பு காரணமாக, அணையின் நீர்மட்டம் குறைவதும், காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, அணை மீண்டும் நிரம்புவதுமாக இருந்து வருகிறது.

