புதுச்சேரி: நாகமுத்துமாரியம்மன் கோவில் 42-ஆம் ஆண்டு செடல் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து பிரிவு வடக்கு மற்றும் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் N.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நைனார்மண்டபம், பாண்டி-கடலூர் சாலையில் அமைத்துள்ள ஸ்ரீ நாக முத்துமாரியம்மன் கோவில் 42-ஆம் ஆண்டு செடல் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்களின் வசதிக்காக நாளை மதியம் சுமார் 02.00 மணிமுதல் பாண்டி-கடலூர் சாலை போக்குவரத்தில் கீழ்கண்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதாவது; கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பேருந்துகள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம் கரிக்கலாம்பக்கம் வழியாக வில்லியனூர் அடைந்து பின்பு இந்திராகாந்தி சதுக்கம் வழியாக புதுச்சேரியை அடைய வேண்டும். அதேபோல் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெங்கட சுப்ப ரெட்டியார் சதுக்கம் அடைந்து நெல்லித்தோப்பு இந்திரா காந்தி சதுக்கம் வழியாக வில்லியனூர் அடைந்து கரிக்கலாம்பாக்கம் அபிஷேகப்பாக்கம் வழியாக தவளக்குப்பத்தில் கடலூர் சாலையை அடைய வேண்டும். (அல்லது) கடலூர் செல்லும் வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி RTO Briedge ல் சென்று அரும்பார்த்தபுரம் BY PASS ரோட்டை அடைந்து வில்லியனூர் அபிஷேகப்பாக்கம் தவளக்குப்பம் வழியாக கடலூர் சாலையை அடைய வேண்டும்.
கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் முருங்கபாக்கம் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி கொம்பாக்கம் அரவிந்தர் நகர் வழியாக வேலராம்பேட் ஏரிக்கரை ரோட்டை அடைந்து பின்பு மரப்பாலம் சந்திப்பு வழியாக புதுச்சேரியை அடைய வேண்டும். அதேபோல் புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் இருசக்கர வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி வேல்ராம்பேட் ஏரிக்கரை ரோட்டை அடைந்து அரவிந்தர் நகர் வழியாக கொம்பாக்கம் அடைந்து இடது புறம் திரும்பி முருங்கபாக்கம் சந்திப்பில் கடலூர் சாலையை அடைய வேண்டும். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
The post நாகமுத்துமாரியம்மன் கோவில் 42-ஆம் ஆண்டு செடல் திருவிழா: புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.