நாகர்கோவில்: கன்னியாகுமரி 3 பகுதிகள் கடலால் சூழப்பட்டு, சுமார் 72 கி.மீ கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு மீன்பிடி தொழில் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் மீன்பிடி தொழிலுக்கு பெயர் பெற்றவை. மாவட்டத்தில் பிடிக்கப்படும் மீன்களின் அளவு ஏறத்தாழ 21 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களை காட்டிலும் கன்னியாகுமரியில் உள்ள 20 லட்சம் மக்கள் தொகையில் 95 சதவீதம் மக்கள், அதாவது 19 லட்சம் பேர் தினசரி உணவில் 2 வேளைகளாவது கடல் மீன் உணவை எடுத்து கொள்வர். இதனால் மாவட்டத்தில் மீன்களின் தேவை மிகமிக அதிகமாக உள்ளது. தற்போது மாவட்டத்தில் அதிக இடங்களில் மீன்கடைகள் சாலை ஓரங்களில் சுகாதாரமின்றி விற்பனை செய்யப்படுகின்றன.
அதுபோல ஒரு சில இடங்களில் மீன்களை விற்பனை செய்துவிட்டு கழிவுகளை அப்படியே சாலைகளிலும், பொது இடங்களிலும் போட்டு விடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு சீர்கேடு ஏற்படுகிறது. மீன்கள் மற்றும் அவை சார்ந்த அசைவ உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் விற்பனை செய்து, அனைத்து மக்களுக்கும் நல்லமுறையில் கிடைக்க செய்வது அரசின் தலையாய கடமையாகும். எனவே மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் ஒரு மிகப்பெரிய மீன் அங்காடி அசைவ உணவு விற்பைன நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக மாவட்டத்தில் பார்வதிபுரம் அருகே உள்ள ஆர்ச்சர் நிலத்தை பயன்படுத்தலாம். இங்கு மிகப்பெரிய அளவில், உலக தரத்தில், முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 அல்லது 5 மாடிகள் கொண்ட ஒரு மீன் அங்காடி அசைவ உணவு விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் அதிக அளவில் மீன் விற்பனை உள்ளதால், பெரிய பொருளாதார வாய்ப்புகள் உள்ளன. ஒரு சில மீன்பிடி தடைக்காலங்களில் கேரளாவில் இருந்து மீன்கள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் அரபிக்கடலில் மீன்பிடி தடைக்காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து மீன்கள் கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன. ஆகவே இந்த மீன் அங்காடியில் ஒரு தளம் முழுவதும் மீன்கள் மொத்த வியாபாரத்திற்கு என்று ஒதுக்க வேண்டும். இந்த தளத்தில் பெரிய சரக்கு வாகனங்கள் வந்து நின்று மீன்களை ஏற்றி இறக்கி செல்ல வசதி இருக்குமாறு ஏற்படுத்த வேண்டும்.
இந்த விற்பனை நிலையம் வழியாக அரசுக்கு கணிசமான அளவில்வருவாய் கிடைக்கும். பார்வதிபுரத்தில் உள்ள ஆர்ச்சர் நிலத்தில் இது அமைக்க ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், கலெக்டர் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, சிறப்பு ஆணை பிறப்பித்து இந்த மீன் அங்காடி அசைவ உணவு விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சில ஆலோசனைகள்
* பார்வதிபுரம் மேம்பால பஸ் நிறுத்தத்தில் இருந்து நேரடியாக மீன் கடைக்கு செல்ல நடை பாலம் அமைக்க வேண்டும்.
* மீன்களை வாங்கி செல்லும் பொதுமக்கள் அதிக வெப்பம் காரணமாக அவை கெட்டுப்போகாமல் இருக்க, ஐஸ் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும்.
* மீன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளனவா? பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளனவா என்று கண்காணிக்க மீன்வளத்துறை சார்பில் பரிசோதனை நிலையம்/ஆய்வகம் இந்த கட்டிடத்தில் அமைக்க வேண்டும்.
* மீன்களை பாதுகாப்பாக சேகரித்து வைக்க பெரிய ஐஸ் அறைகள் தனியாக அமைக்க வேண்டும்.
* பொதுமக்கள் வாங்கும் மீன்களை பார்சல் செய்து கொண்டு செல்வதற்கு என்று பிளாஸ்டிக் இல்லாத பேப்பர், இலை போன்ற விற்பனை கடைகள் அமைக்க வேண்டும்.
* மீன்களை கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து செல்வதற்கு வசதியாக சுத்தம் செய்து கழுவும் இடம் தனியாக அமைக்க வேண்டும்.
* குமரி மாவட்டத்தில் மாங்காய், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் போன்ற காய்கறிகள் சேர்த்து மீன் குழம்பு வைப்பர். எனவே காய்கறிகள் வாங்க தனியாக கடைக்கு செல்லாமல், அனைத்தும் ஒரே கட்டிடத்தில் அமையுமாறு காய்கறி கடைகள் அமைக்க வேண்டும்.
* அதே கட்டிடத்தில் சுமார் தேனீரகங்கள், உணவகங்கள் அமைக்க வேண்டும்.
* தரைத்தளம் முழுவதும் வாகன பார்க்கிங் நிலையம், ஒரு தளத்தில் இருச்சக்கர வாகன நிறுத்தம் வேண்டும்.
* மீன் கழிவுகளை சேகரித்து பயோ முறையில் மக்கச்செய்து உரமாக பயன்படுத்த வேண்டும்.
* மீன் கருவாடு விற்பனை செய்வதற்கு என்று தனி இடம் ஒதுக்க வேண்டும்.
* ஒரு தளம் முழுவதும் தனித்தனியாக கறிக்கோழி, காடைக்கோழி, நாட்டுக்கோழி, அலங்கார மீன்கள், அலங்கார வீட்டு விலங்குகள் விற்பனை நிலையங்கள் அமைக்க வேண்டும்.
* ஒரு தளம் முழவதும் ஆடு, மாடு, பன்றி இறைச்சி விற்பனை நிலையங்கள் தனித்தனியாக அமைக்க வேண்டும்.
* அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பெருகிவரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, இந்த கட்டிடத்தில் அனைத்து கடைகளையும் விரிவாக்கம் செய்யும் வகையில் திட்டமிடல் இருக்க வேண்டும்.
The post நாகர்கோவிலில் 5 மாடிகள் கொண்ட மீன் அங்காடி அசைவ உணவு விற்பனை நிலையம் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.