வாஷிங்டன்: உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதிஉதவிகளுக்கு பதிலாக உக்ரைன் நாட்டில் உள்ள அரியவகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு காலவரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இதற்கு ஜெலன்ஸ்கி சம்மதிக்காததால் உக்ரைன் போரில் அமெரிக்கா அனைத்து உதவிகளையும் நிறுத்தி விட்டது. இதனால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் கடந்த சில நாட்களாக உக்ரைன் தவித்து வருகிறது.
மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் அமெரிக்கா செல்லும் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப்பெறவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தும்படி ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா பயணம் குறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில்,’ அமெரிக்காவுடனான பொருளாதார ஒப்பந்தம் தயாராக உள்ளது. ஆனால் பாதுகாப்பு உத்தரவாதம் என்னவென்றால், கீவ் இன்றியமையாதது என்று முடிவு செய்யப்பட வேண்டும்.
உக்ரைன் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஒரு விரிவான ஒப்பந்தத்தை நோக்கிய முதல் படியாக இந்த ஒப்பந்தம் அமையும். மேலும் ராணுவ ஆதரவில் அமெரிக்கா எந்த பக்கம் நிற்கிறது என்பதை உக்ரைன் தெரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் நான் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறேன். உக்ரைன் நேரடியாக அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்க முடியுமா என்பதுதான் நான், அதிபர் டிரம்புடன் விவாதிக்க விரும்பும் முக்கிய கருத்து ஆகும்’ என்றார்.
The post நாளை டிரம்ப்புடன் சந்திப்பு; அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு appeared first on Dinakaran.