மாடர்ன் தியேட்டர்ஸின் கதை இலாகாவில் அப்போது இருந்தார், இயக்குநரும் நடிகருமான ஏ.பி.நாகராஜன். அவரும் நடிகர் வி.கே.ராமசாமியும் சிறு வயது நண்பர்கள். கலையுலக இரட்டையர் என்று அழைக்கப்பட்டவர்கள். அந்த நட்பின் அடிப்படையில் ஏ.பி.நாகராஜன், ‘நாம ஏன் சொந்தமாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கக் கூடாது?’ என்று கேட்டார், வி.கே.ராமசாமியிடம்.
சில பல யோசனைகளுக்குப் பிறகு, ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் என்று பெயரில் இருவரும் தொடங்கினார்கள், தயாரிப்பு நிறுவனத்தை. திடீரென்று ஒரு நாள், ஏ.பி. நாகராஜன், “இது உங்களின் சொந்த நிறுவனமாக இருக்கட்டும். நான் பார்ட்னராவதற்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, சேர்ந்து உழைப்போம்” என்று சொல்ல, அதை ஏற்கவில்லை வி.கே.ராமசாமி. “பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சேர்ந்தே ஆரம்பிப்போம்" என்று கூறி, அவரையும் இணைத்துக்கொண்ட வி.கே.ராமசாமி, ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம், ‘மக்களைப் பெற்ற மகராசி’.
இதில் சிவாஜி, பானுமதி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, சகாதேவன், எம்.என்.ராஜம், கண்ணாம்பா, டி.பி.முத்துலட்சுமி என பலர் நடித்தனர். கே.சோமு இயக்கிய இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல்களை, மருதகாசி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினர்.