
இந்த சீசனின் மிக நியாயமற்ற ஒரு வெளியேற்றம் இந்த வாரம் நடந்தேறியுள்ளது. முதல் வாரத்தில் இருந்து எதுவுமே செய்யாமல் ‘மிக்சர்’ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் உள்ளே இருக்க, டாஸ்க்குகளில் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வந்த பிரவீன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
வைல்டு கார்டு என்ட்ரிக்குப் பிறகு இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யத்துடன் இருந்தது. அதற்கு காரணம் பழைய போட்டியாளர்களை ‘கெஸ்ட்’ ஆக வரவழைத்து நடத்தப்பட்ட ‘ஆஹோ ஓஹோ ஹோட்டல் டாஸ்க்’. குறிப்பாக முந்தைய சீசன்களின் வெற்றியையும், இந்த சீசனின் தடுமாற்றத்தையும் பிக்பாஸே குறியீடாக சொல்லியிருப்பது நேர்மையாக இருந்தது. பிக்பாஸ் டீம் செய்த இன்னொரு நல்ல விஷயம், சாண்ட்ராவிடம் சீக்ரட் டாஸ்க்கை ஒப்படைத்தது. அதை அவரும் மிக திறமையாக செய்து முடித்தது இந்த வாரத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியது.

