சென்னை: தமிழ்நாட்டில் ஹைட்ரஜன் எரிசக்தி கண்டிப்பாக வந்தே தீரும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஜனவரி மாதம் நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் சென்னை ஐஐடி வழிகாட்டுதலின்படி ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதை தொடர்ந்து தையூரில் உள்ள சென்னை ஐஐடி டிஸ்கவரி செயற்கைக்கோள் வளாகத்தில் 65,000 சதுரடி பரப்பளவில் ரூ.180 கோடி செலவில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் தொடங்குவதற்கான வடிவமைப்பு அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: ஹைட்ரஜன் சக்தியை நோக்கி இந்திய அளவில் தமிழக அரசு சென்னை ஐஐடியுடன் இணைந்து மிகப்பெரிய முன்னெடுப்பை தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. இதுதான் முதன்முறை, நமக்கு தேவையான எரிசக்திகளை நாமே உருவாக்குவதுதான் இதன் நோக்கமே. நமக்கான பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.
நாமே கண்டுபிடித்து பொருட்களை ஆராய்ச்சி செய்து உலக அளவில் அனுப்ப வேண்டும். அது போன்றுதான் ஹைட்ரஜன் எரிசக்தியை பார்க்கிறேன். ஹூண்டாய் கம்பெனியுடன் இணைந்து தமிழ்நாடு முயற்சியில் இறங்குவது பெருமை கொள்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த பிறகு பசுமை ஹைட்ரஜனில் சில சுணக்கம் ஏற்பட்டது. அதனால் ஹைட்ரஜன் எரிசக்தி எவ்வளவு விரைவில் வரும் என்பதுதான் சந்தேகம் தவிர, ஆனால் கண்டிப்பாக வந்தே தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐஐடி இயக்குனர் கூறுகையில், ‘‘அடுத்த 2-3 ஆண்டுகளில் நாங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் ஹூண்டாய் காரில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்று மீண்டும் சென்னை திரும்ப உள்ளோம். போகின்ற வழியில் ஹைட்ரஜன் ரீ-ப்யூலிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அதற்கு அதிக திறன் தேவை. அதனையும், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்து, அதன்மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, கார்களுக்கு எளிதாகவும், மிகக்குறைந்த விலையிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
மேலும் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களும், அப்பகுதிகளில் உள்ள MSME தொழிற்சாலைகள் மூலம், நம் மக்கள் மூலமாகவே அதை தயாரிக்க வேண்டும். வெளிநாட்டு தொழில்நுட்பத்தால் அல்ல. அது மிகவும் குறைந்த விலையாக இருக்கும், இதுவே இந்த ஆராய்ச்சி மையத்திற்கான இலக்காக உள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் போது மாசுப்பாடு குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஹூண்டாய் நிறுவன தலைமை உற்பத்தி அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘180 கோடி மதிப்பீட்டில் பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி மையம் சென்னை ஐஐடி உடனும் தமிழ்நாடு அரசுடனும் இணைந்து உருவாக்குவதில் ஹூண்டாய் நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது. இந்த பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குறைந்த செலவில் வருவதற்கு முயற்சிஎடுக்கப்படும். முதன் முதலாக உலகளவில் சென்னையில் ஆய்வு மையத்தை அமைத்துள்ளோம்’’ என்றார்.
The post ஹைட்ரஜன் எரிசக்தி கண்டிப்பாக வந்தே தீரும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி appeared first on Dinakaran.