
கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் வெள்ளை நிற உடைகளில்தான் வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வண்ண சீருடைகளில் விளையாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு பின்னர் பெரிய கதையும், போராட்டமும் உள்ளது. 1970-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி பெட்டி (டி.வி) கருப்பு வெள்ளையில் இருந்து வண்ண நிறத்துக்கு மாறியது. அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மீடியா நிறுவனரான கெர்ரி பேக்கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்தார்.
அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை அணுகி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமம் கோரினார். வழக்கமான தொகையைவிட 8 மடங்கு அதிகம் வழங்குவதாக கூறினார். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒளிபரப்பு உரிமத்தை கொடுக்க மறுத்தது. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே அரசு நடத்தி வரும் ஏபிசி சேனலுக்கு 20 ஆண்டுகள் அடிப்படையில் உரிமம் வழங்கியிருந்தனர்.

