சென்னை: அகமதாபாத் விமான விபத்துக்கு பின்பு, நாடு முழுவதும் விமான சேவைகளில், முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் செய்து வருகிறது. அதன்படி சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து பிரிவினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான, ஆலோசனைக் கூட்டம், சென்னை விமான நிலையத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், விமான பாதுகாப்பு துறையான பி சி ஏ எஸ் அதிகாரிகள், அனைத்து விமான நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள், அதிரடிப்படை அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த ஆய்வுக் கூட்டத்தில், ஓடிஏ வளாகத்தில், மிகப்பெரிய அளவில், பாதுகாப்பு ஒத்திகை ஒன்றை நடத்துவது என்றும், அதில் விமான நிலையம் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிசிஏஎஸ், சிஐஎஸ் எப் உள்ளிட்ட அதிகாரிகள், வீரர்கள், தீயணைப்புத்துறையினர், மருத்துவ துறையினர், காவல்துறையினர், உள்ளிட்டோர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிப்புகள் அதிகமாக ஏற்படாமல் தடுப்பது, போன்ற பல வகையான ஏற்பாடுகளுடன், ஒத்திகை அணிவகுப்பை, மிகப்பெரிய அளவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவசர காலங்களில் விபத்து நேரங்களில், அனைத்து துறையினரும், ஒருங்கிணைந்து துரிதமாக செயல்பட்டு, பாதிப்புகளை வெகுவாக குறைப்பதோடு, பாதிப்புகளே ஏற்படாமல் தடுக்கவும், பயிற்சியாளர்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை, பரங்கிமலை ஓ டி ஏ வில் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை.
The post சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக அனைத்து துறை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.