இஸ்லாமாபாத்: 2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தனின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின், அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா (37), தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டார்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் சரரோகா பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் ராவல்பிண்டியில் உள்ள அவரது சொந்த கிராமமான சக்லாலா காரிசனில் நடைபெற்றது. இதில், ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டதாக பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.