
சிவகங்கை: சிவகங்கை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்தவருக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதச் சொல்லி பதில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். சிவகங்கை அருகே அரசனூர் ஊராட்சி திருமாஞ் சோலையில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கான ரேஷன் கடை 3 கி.மீ. தூரத்தில் உள்ள செம்பூரில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை கேட்டு நீண்ட காலமாகப் போராடுகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 31-ம் தேதி அரசனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது. இதில் திரு மாஞ்சோலையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் பகுதிநேர ரேஷன் கடையை தங்கள் பகுதியில் அமைக்கக் கோரி மனு கொடுத்தார். முகாமில் கொடுக்கப்படும மனுக்களுக்கு 45 நாட்களில் பதில் தரப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், 70 நாட்கள் கழித்து அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதில் கடிதம் வந்துள்ளது.

