
திருநெல்வேலி/ தென்காசி: தென் மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் இன்றும் நீடிக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், திருநெல்வேலி மாநகரம் வெள்ளக்காடானது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரையிலும் பலத்த மழை பெய்தது. மாலையில் மீண்டும் மழை தொடங்கி பெய்தது.

