கொழும்பு: இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், "இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது" என தெரிவித்தார்.