கெய்ரோ: இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ளகாசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம் அகற்றப்படும். ஹமாஸ் குழுவின் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்ட பிறகு காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும்.