புதுடெல்லி: இஸ்ரோவின் துல்லிய தகவல்களுக்கு மத்தியில் ஆபரேஷன் சிந்தூரில் வெளிநாட்டு செயற்கைக் கோள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதால், உள்நாட்டு விண்வெளி திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கடந்த 7ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்த நடவடிக்கையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உள்நாட்டு செயற்கைக் கோள்கள் முக்கிய பங்கு வகித்தன. இஸ்ரோவின் உயர் துல்லிய செயற்கைக் கோள்கள், பாகிஸ்தானின் நிலைகளை கண்டறிந்து, அதன் இலக்குகளை துல்லியமாக கண்டறியவும், நிகழ்நேர கண்காணிப்பு தகவல்களை வழங்கவும் பயன்படுத்தப்பட்டன. மேலும், வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் உளவுத் தகவல்களையும் வழங்கி உள்ளன. இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இஸ்ரோவின் கார்டோசாட் மற்றும் ரிசாட் தொடர் செயற்கைக் கோள்கள், ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றின. இவை பூமி கண்காணிப்பு மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களை வழங்கின.
இந்த செயற்கைக் கோள்கள் இரவு நேர கண்காணிப்பு மற்றும் மோசமான வானிலையிலும் துல்லியமான தகவல்களை வழங்கும் திறன் கொண்டவை என்பதால், அவ்வப்போது அப்டேட் படங்களை வழங்கின. மேலும், ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட ஆளில்லா நெட்ரா விமானங்கள் இலக்கு கண்டறிதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த உள்நாட்டு தொழில்நுட்பங்கள் இந்தியாவின் சுயசார்பு விண்வெளி திறனை வெளிப்படுத்தின. ஆனால் வெளிநாட்டு செயற்கைக் கோள்களின் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதால், சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு சில நாடுகளின் உதவியுடன் மேலும் துல்லிய இலக்குகளை கண்டறியவும், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பரிமாற்றிக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டன.
வெளிநாட்டு செயற்கைக் கோள்களின் பயன்பாடு, குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் உளவுத் தகவல் சேகரிப்பை மேம்படுத்தியிருக்கலாம். இவை உயர் துல்லிய பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கியதாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை இந்தியாவின் விண்வெளி துறையில் சர்வதேச கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆனால் எதிர்காலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் செயற்கைக் கோள் திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்ற அச்சத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர். இதனால், இந்தியா தனது உள்நாட்டு விண்வெளி திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post இஸ்ரோ வழங்கிய துல்லிய தகவல்களுக்கு மத்தியில் ஆபரேஷன் சிந்தூரில் வெளிநாட்டு செயற்கைக் கோள்?: விஞ்ஞானிகள் கருத்து appeared first on Dinakaran.