புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதற்கு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருந்த பத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் உட்சபட்ச அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் 19ம் தேதி மாநிலங்களைவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், ‘‘உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. அரசியல் சாசன பிரிவு 142ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் உச்ச நீதிமன்றம் பயன்படுத்துகிறது.
மேலும் அரசியலமைப்பின் 145வது பிரிவை விளக்குவதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. அரசியலமைப்பு அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த பேச்சானது நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இருக்கும் கருத்து வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்று இருக்கும் பி.ஆர்.கவாய் அளித்த பேட்டியில் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில், “நாடாளுமன்றம் மிக உயர்ந்தது என்று சொல்வது நல்ல கூற்று கிடையாது. இறுதியில் அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது. நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தி்ன் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்பட வேண்டும். நாடாளுமன்றம் செயல்படாதபோது அல்லது நிர்வாகம் தனது கடமைகளைச் செய்யாதபோது மட்டுமே நீதித்துறை அதில் கண்டிப்பாக தலையிடும். மேலும் நீதித்துறையின் அதிகப்படியான தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், கொள்கை முடிவுகள் தொடர்பான பொதுநல வழக்குகளை கையாள உச்ச நீதிமன்றம் சமீப காலமாக தயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. அதனை நான் நிராகரிக்கிறேன்” என்று கூறினார்.
* குடியரசு தலைவரின் 14 கேள்விகள்: கூடுகிறது உச்ச நீதிமன்ற கொலீஜியம்
மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உள்பட மொத்தம் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க பி.ஆர்.கவாய் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின்னர் கொலீஜியம் அமைப்பு விரைவில் கூட உள்ளது. அப்போது குடியரசுத் தலைவர் கேட்ட விளக்கம் தொடர்பாக விசாரணை நடத்த எத்தனை நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உருவாக்கலாம், அதில் எந்தெந்த நீதிபதிகள் இடம்பெறுவார்கள், அதிகபட்சமாக ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன சிறப்பு அமர்வை உருவாக்கலாமா, அதனைத்தொடர்ந்து எப்போது விசாரணையை மேற்கொள்ளலாம் ஆகியவை உட்பட அனைத்தும் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதைத்தவிர குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்விகளுக்கு, வழக்கின் மனுதாரர்கள் வாதங்கள் மற்றும் பதிலளிக்கும் விதமாக புதியதாக உருவாக்கப்படும் அரசியல் சாசன அமர்வு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிய வந்துள்ளது.
The post நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது: குடியரசு துணைத்தலைவர் தன்கருக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் பதில் appeared first on Dinakaran.