டெல்லி : நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது அவமானமாக கருதும் நிலை ஏற்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,”ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. அந்நிய மொழியில் நமது கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை புரிந்துகொள்ள முடியாது” என தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி.கனிமொழி, “மக்கள் மீது உங்களுக்கு விருப்பமானதை திணிப்பதும், இந்திய நாட்டின் பன்மைத்துவத்தை அழிக்க நினைப்பதும் தான் அவமானப்பட வேண்டிய ஒரே விஷயம்.”எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை போல், அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ” நாட்டில் உள்ள ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்க கூடாது என பாஜக, ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. தங்களை நோக்கி கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலம் கற்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. இன்றைய உலகில் தாய்மொழியை போலவே ஆங்கிலம் முக்கியமானதாக உள்ளது. அனைத்து பிராந்திய மொழிகளும் இந்தியாவின் ஆன்மாதான்; அதே நேரம் ஆங்கிலமும் கற்க வேண்டும். குழந்தைகள் ஆங்கிலம் கற்பதுதான் உலகத்துடன் போட்டி போடுவதற்கான பாதையாக இருக்கும். ஆகவே ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது அவமானமாக கருதும் நிலை ஏற்படும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு ராகுல் காந்தி, கனிமொழி பதிலடி appeared first on Dinakaran.