புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்திய படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் அவை அனைத்தையும் நடுவானிலேயே தகர்த்து அழித்தது. இந்த மோதல் ஒருசில நாட்கள் நீடித்த நிலையில், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.