*காப்பாற்ற சென்ற வாலிபர் வேறொரு விபத்தில் இறந்தார்
திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு வாலிபர் வீட்டுக்கு பைக்கில் திரும்பிச் செல்லும் வழியில் மின்கம்பத்தின் மீது மோதி பரிதாபமாக இறந்தார்.திருவனந்தபுரம் அருகே பெரும்பழுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அகில் (19), சாமுவேல் (20), அபின் (19). 3 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் இரவு 3 பேரும் சாப்பிடுவதற்காக பைக்கில் பாலராமபுரத்திற்கு சென்றனர். ஓட்டலில் சாப்பிட்ட பின்னர் நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.பாலராமபுரம் அருகே மடவூர்ப்பாறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அந்த பகுதியினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அகில், சாமுவேல், அபின் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே விபத்து நடந்தபோது அந்த வழியாக வந்த தான்னிவிளை பகுதியை சேர்ந்த மனோஜ் (26) என்பவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டார். பின்னர் பைக்கில் அவர் வீட்டுக்கு சென்றார். மடவூர்ப்பாறை-தான்னிவிளை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தின் மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
The post திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.