புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 2025-26-ம் நிதியாண்டுக்கு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யும் பணிகளில் வரி செலுத்துவோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளாதக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவகாசம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் செப். 15 காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரி துறை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளதாவது: தற்போது வரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்க முன்கூட்டியே வரி தாக்கல் செய்வதன் முக்கியத்துவத்தை விளக்கும் வீடியோக்களை வருமான வரி துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அதிகரித்து வருகிறது.